உலக மக்கள் தொகை 800 கோடியை தொட்டது: ஐக்கிய நாடுகள் சபை தகவல்

நியூயார்க்: உலக மக்கள் தொகை வரும் 15ம் தேதியுடன் 800 கோடியை தொடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள்தொகை ஆண்டுக்கு 1.10 சதவீதம் அதிகரிக்கிறது. ஆண்டுக்கு 83 மில்லியன் (8.30 கோடி) மக்கள் அதிகரித்து வருகின்றனர். உலக மக்கள் தொகை 2030ல் 8.5 பில்லியனாகவும் (850 கோடி), 2050ல் 9.8 பில்லியனாகவும், 2100ல் 11.2 பில்லியனாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1987 உலக மக்கள்தொகை புள்ளிவிவரம் 5 பில்லியனைத் தாண்டியது. ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் ஆளும் குழு 1989ல் உலக மக்கள்தொகை தினத்தை நிறுவியது.

இந்நிலையில் ஐநா வெளியிட்ட அறிக்கையில், ‘வரும் 2030ல் உலக மக்கள் தொகை 8.5 பில்லியனாக (850 கோடி) இருக்கும். வரும் 15ம் தேதிக்குள் உலக மக்கள் தொகை 8 பில்லியனை (800 கோடி) எட்டும். உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் சீனா உள்ளது. ஆனால் 2023ம் ஆண்டில் சீனாவுக்குப் பதிலாக உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும். கடந்த 1950ம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக 2020ம் ஆண்டில் உலக மக்கள்தொகை வளர்ச்சி ஒரு சதவீதத்திற்கும் குறைவாகக் குறைந்துள்ளது. காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தான்சானியா ஆகிய எட்டு நாடுகளில் மட்டுமே மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: