கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்லக்கூடிய விமானங்கள் தாமதம்: விமான நிலைய அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளி நாடுகளுக்கு செல்லக்கூடிய விமானங்கள் கனமழை காரணமாக 15 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றது. பிற பகுதிகளில் இருந்து சென்னைக்கு வரக்கூடிய விமானங்கள் குறித்த நேரத்தில் தரையிறங்கியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று நள்ளிர முதல் தொடர்ந்து மழை பெய்தது. கனமழை காரணமாக விமானிகள், ஊழியர்கள் மற்றும் பயணிகள் விமான நிலையத்திற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது.

இதன் காரணமாக சென்னையில் இருந்து வெளி நாடுகளுக்கு செல்லக்கூடிய துபாய், கத்தார், பாங்காக், இலங்கை, சிங்கப்பூர் போன்ற விமானங்களும், திருச்சி, மதுரை, மும்பை, கொல்கத்தா, விஜயவாடா, அந்தமான், போன்ற உள்நாட்டு விமானங்களும் சுமார் 15 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை காலதாமதமாக புறப்பட்டுச்சென்றது. மேலும் பிற பகுதிகளில் இருந்து சென்னைக்கு வரக்கூடிய விமானங்கள் குறித்த நேரத்தில் தரையிறங்கியதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: