×

புழல் அருகே ஆள்மாறாட்டம் செய்து ரூ.1.25 கோடி நிலத்தை அபகரித்தவர் கைது

ஆவடி: புழல் அருகே பெண் ஒருவரின் ரூ.1.25 கோடி மதிப்பிலான நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து விற்பனை செய்த வாலிபரை நேற்று நில அபகரிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். சென்னை அரும்பாக்கம், எம்எம்டிஏ காலனியை சேர்ந்தவர் ஹேமலதா. இவர் கடந்த வருடம், அக்டோபர் 4ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார்.

அப்புகாரில், தனக்கு சொந்தமாக புழல் அருகே புத்தாகரம் பகுதியில் கிராம சர்வே எண் 30/2 மற்றும் 30/4-ல் 2440 சதுர அடி காலி மனையில் ஓலை வீடு உள்ளது. அதன் அன்றைய மதிப்பு ரூ.30 லட்சம். இதன் அசல் ஆவணங்கள் தன்னிடம் இருக்கும்போது, தனது பெயர் கொண்ட ஒரு பெண் மூலம் ஆள்மாறாட்டம் செய்து, போலி ஆவணங்கள் தயாரித்துள்ளனர். பின்னர் அதன் மூலம் சுகுமார் என்பவருக்கு பொது அதிகாரம் வழங்கியது போல் அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துள்ளனர்.

பின்னர் அந்நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக கடந்த 2020ல் மூக்காண்டி தமிழ்செல்விக்கு விற்றுள்ளனர். இதைத் தொடர்ந்து, கடந்த 2021ம் ஆண்டு அவர்களிடம் இருந்து அந்நிலத்தை வெங்கட்ராமன் என்பவர் ரூ.1.25 கோடிக்கு வாங்கி, வீடு கட்டி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு எனது நிலம் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தபோது, அந்த நிலம் ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் மூலமாக பலருக்கு விற்பனை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட நபர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் ஹேமலதா வலியுறுத்தியிருந்தார்.

இப்புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர், சம்பந்தப்பட்ட நிலம் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதியில் அவ்வழக்கை ஆவடி நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து, இவ்வழக்கு விசாரணையை இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி தீவிரமாக மேற்கொண்டார்.

விசாரணையில், ஹேமலதா பெயரில் ஆள்மாறாட்டம் செய்த, போலி ஆவணங்கள் மூலமாக ரூ.1.25 கோடிக்கு அவரது நிலம் விற்பனை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஆவடி காவல் ஆணையரக கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.

இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி, ஆள்மாறாட்டம் செய்து நில அபகரிப்பில் ஈடுபட்ட சென்னை வியாசர்பாடி, இந்திரா நகரை சேர்ந்த சுகுமார் (32) என்பவரை நேற்று ஆவடி நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Puzhal , Arrest of Rs 1.25 crore land impersonator near Puzhal
× RELATED புழல் சிறைச்சாலையில் செல்போன் பறிமுதல்