×

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை தொடர்ந்து மீதமுள்ள 6 பேர் விடுதலை: ராமதாஸ் வரவேற்பு

சென்னை; பேரறிவாளனை தொடர்ந்து மீதமுள்ள 6 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அரசியல் சட்டத்தின் 161-வது பிரிவை பயன்படுத்தி பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்திருந்த நிலையில், நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; ராஜிவ் கொலை வழக்கில் தண்டனைக் காலத்தை நிறைவு செய்த பிறகும் சிறை தண்டனை அனுபவித்து வந்த  நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய  6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. 6 தமிழர்களின் நன்நடத்தை, கல்வித் தகுதி மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், பேரறிவாளன் வழக்கில் வழங்கப்பட்ட  தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக  உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது.

இது வரவேற்கத்தக்கது. 6 தமிழர்களின் விடுதலைக்கு 09.09.2018-இல் தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் தான் அடிப்படை. அமைச்சரவை தீர்மானத்தை அப்போதே ஆளுனர் ஏற்றுக் கொண்டிருந்தால் அப்போதே அவர்கள் விடுதலையாகியிருப்பார்கள். இப்போது  4 ஆண்டுகள் தாமதமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். அமைச்சரவையின் முடிவுகள் மீது ஆளுனர்கள் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்படாதது தான் பல சிக்கல்களுக்கு காரணம் ஆகும். இந்த நிலையை மாற்ற அமைச்சரவையின் பரிந்துரை, தீர்மானம் ஆகியவற்றின் மீது ஆளுனர்கள் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Tags : Rajiv Gandhi ,Ramadas , Remaining 6 freed after Perariwalan in Rajiv Gandhi assassination case: Ramadoss welcome
× RELATED சென்னை ராஜிவ் காந்தி அரசு...