×

போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்-ராஜபாளையத்தில் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் வளர்ச்சித் திட்டப்பணிகள் நடந்து வரும் நிலையில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, திட்டமிட்டு பணிகளை விரைவாக முடிக்கவும், சாலைகளை விரைவாக அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ராஜபாளையம் நகரில் ரயில்வே மேம்பாலம், பாதாளச் சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகிய வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பாதாளச் சாக்கடை திட்டப் பணிக்காக சாலைகளில் தோண்டுவதால், அப்பகுதியில் போக்குவரத்தை நிறுத்தி விடுகின்றனர். இதனால், நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை நேரங்களில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர், அரசு, தனியார் அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்கள் குறித்து நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

நகரில் உள்ள பாலத்திற்கு அடியில் நான்கு சக்கர வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர். மலையடிப்பட்டி ரயில்வே கேட்டில் இருபுறமும் காலை நேரங்களில் 2 கி.மீ தூரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அவசரத்திற்கு ஆட்டோவில் மருத்துவமனைக்கு செல்லும் கர்ப்பிணிகள் அவதிப்படுகின்றனர். தென்காசி சாலையை மட்டும் போக்குவரத்து போலீசார் கண்காணிக்கின்றனர்.

மற்ற சாலைகளை கண்டுகொள்வதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. காலாண்டு விடுமுறை சமயங்களில் கணபதியாபுரம் சாலையை அமைத்து தருவோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, நகராட்சி அதிகாரிகளும், சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர்களும் கணபதியாபுரம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரயில்வே பாலத்திற்கு அடியில் நேற்று மூன்று டிராக்டர்கள் சிக்கிக் கொள்ள, மாணவர்களும், அவர்களை பள்ளிக்கு அழைத்து செல்லும் பெற்றோர்களும், வேலைக்கு செல்பவரும் அவதிப்பட்டனர்.

 எனவே, ராஜபாளையத்தில் பொதுமக்களின் போக்குவரத்தை கருத்தில் கொண்டு, சாலை அமைக்கும் பணியையும், வளர்ச்சித் திட்டப்பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Rajapalayam , Rajapalayam: As development projects are going on in Rajapalayam, there is frequent traffic jam and public
× RELATED கல்லூரி முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி