×

திருவில்லிபுத்தூர்-செண்பகதோப்பு சாலையில் பஸ் போக்குவரத்துக்கு இடையூறான மரக்கிளைகள்

திருவில்லிபுத்தூர் : திருவில்லிபுத்தூரிலிருந்து செண்பகத்தோப்புக்கு செல்லும் சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக வளர்ந்திருக்கும் மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவில்லிபுத்தூர் அருகே, மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் செண்பகத்தோப்பு வனப்பகுதி உள்ளது. இப்பகுதியில் பேச்சியம்மன் கோயில், காட்டழகர் கோயில் உள்ளிட்ட ஆன்மிக தலங்களும், மீன்வெட்டிப்பாறை அருவி, சாம்பல் நிற அணிகள் சரணாலயம் ஆகிய சுற்றுலாத் தலங்களும் உள்ளன. இந்த மலையடிவாரத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்களும் உள்ளன.

 இங்கு மலைவாழ் மக்களுக்கான குடியிருப்பு உள்ளதால், காலை, மாலை வேளைகளில் திருவில்லிபுத்தூரில் இருந்து செண்பகதோப்புக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருவில்லிபுத்தூர்-செண்பகதோப்பு சாலையில் இருபுறமும் மரங்களின் கிளைகள் சாலையை மறைக்கும் அளவிற்கு அடர்த்தியாக வளர்ந்துள்ளன. வாகனங்களின் மேற்புறத்தை சேதப்படுத்தும் அளவிற்கு கிளைகளும் தடிமனாக உள்ளன. தற்போது பரவலாக மழை பெய்து வருவதால், கிளைகளில் தளிர்த்து வளர்ந்துள்ளன.

இதனால், அரசு பஸ், விவசாய டிராக்டர் மற்றும் சுற்றுலா வாகனங்கள் சாலையில் செல்வதில் சிரமம் ஏற்படுகின்றது. அரசுப் பஸ் சேதமடைந்தால் ஓட்டுநர் பொறுப்பு என்பதால், இவ்வழித்தடத்தில் பஸ் இயக்குவதற்கு ஓட்டுநர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் போக்குவரத்துக்கு இடையூறான மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thiruvilliputhur ,Shenpagatopu road , Thiruvilliputhur: On the road from Tiruvilliputhur to Chenbagathop, traffic jams have developed.
× RELATED செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம்