×

படியில் தொங்கிச் செல்லும் மாணவர்களால் விபத்து அபாயம் அரசு டவுன் பஸ்களை அதிகம் இயக்க வேண்டும்-சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

விருதுநகர் : பஸ் படிக்கட்டுகளில் தொங்கிச் செல்லும் மாணவர்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், விருதுநகரிலிருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு கூடுதல் அரசு டவுன் பஸ்களை இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.விருதுநகரில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படிப்பதற்காக சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் நகருக்கு வந்து செல்கின்றனர். இதேபோல, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்களும், கூலி வேலைக்கு வரும் தொழிலாளர்களும் அதிகளவில் விருதுநகருக்கு வந்து செல்கின்றனர். இதனால், காலை, மாலை வேளைகளில் பஸ்களில் கூட்டம் அதிகளவில் உள்ளது.

மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவியர் காலை நேரங்களில் பள்ளிக்கு வரும்போதும், மாலையில் வீடு திரும்பும்போதும் குறிப்பிட்ட வழித்தடங்களில் பஸ்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், மாணவர்கள் படிகளில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். மாவட்டத்தில் மக்கள் தொகைப் பெருக்கம், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை அதிகரிப்பு, கிராமங்களில் இருந்து வேலை நிமித்தம் நகரங்களுக்கு வந்து செல்லும் மக்கள் தொகை அதிகரிப்பால், பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஆட்டோ கட்டண உயர்வினாலும் அரசு பஸ்களை பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பஸ்களின் எண்ணிக்கை தேவைக்கு ஏற்ப உயர்த்தப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் பழுதடைந்து ஓரம் கட்டப்பட்ட டவுன் பஸ்களுக்கு ஈடாக டவுன் பஸ்கள் ஒதுக்கப்படவில்லை. இதனால், நகர்ப்புற பஸ்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.இதனால், விருதுநகர் வழியாக இயக்கப்படும் டி.கல்லுப்பட்டி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, இனாம்ரெட்டியபட்டி பஸ்களில் பள்ளி, கல்லூரி, அலுவலங்களுக்கு வந்து, செல்லும் காலை, மாலை நேரங்களில் மாணவர்கள் படிகளில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். இவ்வாறு பயணிக்கும் போது விபத்துக்களில் சிக்கி மாணவர்கள் படுகாயம் அடையும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

காலவதியான பஸ்களில் படிகளில் கம்பிகளை பிடித்து தொங்கி பயணிக்கும்போது கம்பிகள் ஒடிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, விருதுநகரிலிருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு அதிக டவுன் பஸ்களை இயக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் காளிதாஸ், ‘மாணவர்களின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்களை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் பஸ்களில் தொங்கி செல்லும்போது கீழே விழுந்து விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, மாவட்ட போக்குவரத்து கழக நிர்வாகம் காலை, மாலை நேரங்களில் தேவைப்படும் வழித்தடங்களில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : govt , Virudhunagar: There is a risk of accidents due to students hanging on the bus steps. Thus, from Virudhunagar to surrounding villages
× RELATED சென்னை ராஜிவ் காந்தி அரசு...