×

பேராவூரணி பூக்கொல்லை காட்டாற்று பாலத்தில் தடுப்பு வேலி வேண்டும்-பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பேராவூரணி : பேராவூரணி பூக்கொல்லை காட்டாற்றுப்பாலத்தில் தடுப்புவேலி இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் பாலத்தை இடித்து விட்டு புதிதாக அமைத்து தர வேண்டும் எனவும், முதல்கட்டமாக இருபக்கமும் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பேராவூரணியில் இருந்து சேதுபாவாசத்திரம் செல்லும் வழியில் பூனைகுத்தியாறு என்ற காட்டாறு உள்ளது. காட்டாற்றில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் தற்போதுள்ள போக்குவரத்து நெரிசல் சூழ்நிலைக்கு ஏற்றதாக இல்லாமல் குறுகியதாகவும், இருபுறமும் அமைக்கப்பட்ட சிமெண்ட் தடுப்பு வேலிகள் உடைந்து விழுந்து காணப்படுகிறது.

மேலும் இப்பகுதியில் கன மழை பெய்யும் போது, பாலத்தின் மேல் தண்ணீர் செல்லும் நிலை உள்ளது. அந்த நேரங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பாலத்திற்கு அந்தப்பகுதியில் உள்ள மக்கள் பேராவூரணி நகருக்குள் வரமுடியாத நிலை உள்ளது. பாலம் குறுகியதாக இருப்பதால் எதிரே வரும் வாகனத்திற்கு வழி விடும்போது, வாகன ஓட்டிகள் அடிக்கடி ஆற்றில் தவறி விழும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் நேற்று வீரியங்கோட்டை பகுதியில் இருந்து பொருட்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் எதிரே வந்த வாகனத்திற்காக வழி விட்ட போது , கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது. ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டிருந்ததால் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார்.

 இதே போல், கடந்த வாரம் பேருந்துக்கு வழிவிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு வாலிபர் ஆற்றில் தவறி விழுந்த சம்பவமும் நடந்துள்ளது.எனவே பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாலத்தை தற்போதைய போக்குவரத்து சூழலுக்கு ஏற்ப விரிவுபடுத்தி இருபுறமும் பாதுகாப்பு வேலி அமைத்து தர வேண்டும் எனவும், அடிக்கடி விபத்துகள் நடப்பதால் உடனடியாக தடுப்பு வேலி அமைக்க நெடுஞ்சாலைத்துறை, மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Wild Bridge ,-Public Expectation , Peravoorani: Due to the lack of guardrail on the Peravoorani Pookollai forest bridge, accidents often occur.
× RELATED பேராவூரணி-பட்டுக்கோட்டை சாலையில்...