×

மீன் உற்பத்தியை அதிகரிக்கும் தமிழக அரசு வைகை மீன்வளத்துறையில் எண்ணற்ற திட்டங்கள்-தேனி மாவட்ட விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி

ஆண்டிபட்டி :ஆண்டிபட்டி அருகே வைகை அணை மீன்வளத்துறையில் மீன் உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் ஈட்டிடவும், பொதுமக்களுக்கு தரமான மீன்கள் கிடைக்க, விரால் மீன் வளர்ப்பு, நன்னீர் இறால் உடன் கெண்டை மீன் வளர்ப்பு, நடமாடும் மீன் விற்பனை நிலையம், குளிர்காப்பு பெட்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை பகுதியில் மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகம் அமைந்துள்ளது. மீன் பண்ணையின் கிளை அலுவலகம் மஞ்சலாறு அணையிலும் உள்ளது. இந்த மீன்வளத்துறை மூலம் உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரித்து, மக்களுக்கு தரமான மீன் வழங்குவது இந்த துறையின் முக்கிய நோக்கமாக உள்ளது.
வைகை அணை மீன்வளத்துறை அலுவலகத்தின் சார்பில் அணையில் மீன்பிடித் தொழில் நடைபெற்று வருகிறது. இந்த மீன்பிடி தொழிலில் சுமார் 140 மீனவர்கள் 70 பரிசல்களில் மீன் பிடித்து வருகின்றனர். இங்கு ஒருநாளைக்கு 500 கிலோ முதல் 1 டன் வரை மீன்கள் பிடிக்கப்பட்டு மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல் வைகை அணை மீன்வளத்துறை அலுவலகத்தில் மீன் பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மீன் தொட்டிகளில் நுண் மீன்குஞ்சுகள் 45 நாட்களுக்கு வளர்க்கப்பட்டு, மீன் குஞ்சுகள் வளர்ச்சியடைந்த பிறகு அணைகளிலும், கண்மாய், குளங்களிலும் வளர்ப்புக்காக வழங்கப்படும். தற்போது இந்த பண்ணையில் பல லட்சம் மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகிறது.
வைகை அணை மீன்வளத்துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பண்ணைக்குட்டையில்  கிப்ட் திலேப்பியா மீன் வளர்க்கப்பட்டு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பண்ணைக்குட்டை புனரமைத்தல் மற்றும் உள்ளீட்டு மானியமாக ஒரு விவசாயிக்கு ரூ.39 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மீன் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் ஈட்டிடவும், மாவட்டத்தின் மீன் உற்பத்தியினை பெருக்கிடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற 40 சதவீதம் மானியத்தில் அலகு 1ன் ரூ.20 ஆயிரத்தில் மீன்பிடி வலைகள் வழங்கப்பட்டுள்ளது. விரால் மீன் வளர்ப்பினை ஊக்குவிக்க பண்ணைக்குட்டையில், விரால் மீன் வளர்க்க ஒரு விவசாயிக்கு பண்ணைக்குட்டை புனரமைத்தல் மற்றும் உள்ளீட்டு செலவினமாக ரூ.75 ஆயிரம் மதிப்பீட்டடில் 40 சதவீதம் மானியமாக ரூ.3 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. நன்னீர் இறால் மீன் தொழில்நுட்பத்தினை விவசாயிகள் மத்தியில் கொண்டு செல்ல ஏதுவாக 1 அலகு ரூ.62,500 என்ற அடிப்படையில் 40 சதவீதம் மானியமாக ரூ.24 ஆயிரம் வழங்கப்படுகிறது.

 மீன் உற்பத்தியினை பெருக்கிடவும், விவசாயிகள் வருமானத்தை மூன்று மடங்கு உயர்த்திடவும் ஏதுவாக புதிய மீன்பண்ணை அமைக்க 0.3  ஹெக்டேர் பரப்பளவில் பண்ணை அமைக்க ரூ.7 லட்சம் என்ற மதிப்பீட்டில் 50 சதவீதம் மானியமாக ரூ,1.2 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மீன் புரத சத்து கிடைத்திடவும், சுகாதார முறையில் மீன் உணவு மற்றும் மீன்கள் விநியோகம் செய்யப்பட்டு நேரடியாக வீடுகளுக்கே கிடைக்கும் வகையில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நடமாடும் மீன் விற்பனை அங்காடி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 மீன்வர்கள் வாழ்வாதாரத்தை பெருக்கும் விதமாக 40 சதவீதம் மானியத்தில் மீன்படி பரிசல்கள் மற்றும் வலைகள் 40 நபர்களுக்கு ரூ.7.5 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மற்றும் மீன் விற்பனையாளர்கள் தங்கள் மீன்களை சுகாதாரமான முறையில் நல்ல தரத்துடன் சேமித்து விற்பனை செய்ய ஏதுவாக ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் 50 நபர்களுக்கு குளிர்காப்பு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அலங்கார மீன் வளர்ப்பினை ஊக்குவிக்கவும், சுயவேலைவாய்ப்பினை உருவாக்கிட ஏதுவாக ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் அலங்கார மீன்வளர்ப்பு பணிகளை 40 சதவீதம் மானியத்தில் உருவாக்கி தரப்பட்டு சுயவேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டு விவசாயத்துடன் கூடிய கூடுதல் வருவாய் ஈட்டிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நீர்வள, நிலவளத் திட்டத்தின் கீழ் மஞ்சலாறு அணை அரசு மீன்பண்ணை வளாகத்தில் கிப்ட் திலேப்பிய மீன்குஞ்சு பொரிப்பகம் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு திலேப்பியா மீன்குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு சுகாதாரமான முறையில் நல்ல தரமான மீன் மற்றும் மீன் புரத சத்தினை கிடைத்திட வழிவகை செய்ய ஏதுவாக ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் கம்பம் நகராட்சி பகுதியில் நவீன மீன் விற்பனை அங்காடி  அமைக்கப்பட்டு மீன்வ மகளிர் கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய ‘பைக்’

தேனி மாவட்டத்தில் வைகை அணை, மஞ்சளார் அணை மற்றும் சண்முகா நதி அணை ஆகியவை மீன்வளத்துறையின் மூலம் மீன்குஞ்சுகள் ஆண்டுதோறும் இருப்பு செய்யப்பட்டு, மீன் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு, அரசு நிர்ணயம் செய்த விலையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு, கிராமபுற மக்களுக்கு மீன் புரதசத்து கிடைத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு 60 சதவீத மானியத்திலும், பொதுப்பிரிவினருக்கு மானியத்திலும் குளிரூட்டப்பட்ட நான்கு சக்கர வாகனம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மீன் விற்பனையாளர்கள் நல்ல தரமான மீன்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. மீனவர்கள் சில்லரை மீன் விற்பனையாளர்களுக்கு குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய பைக் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

மீன்குஞ்சு வளர்ப்பு தொட்டி

வைகை அணை மீன்பண்ணையில் கூடுதல் மீன் குஞ்சுகள் வளர்க்கும் தொட்டியை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தில் ரூ.142 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் மீன்குஞ்சு வளர்ப்பு தொட்டிகள் மற்றும் மஞ்சலாறு மீன் பண்ணையில் தாய் மீன் மற்றும் சுற்றுச்சுவர் பணிகள் என மொத்தம் ரூ.223.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

Tags : Tamil Nadu Govt Vaigai Fisheries Deptt ,Theni District Farmers, ,People Happy , Andipatti : To increase fish production in Vaigai Dam Fisheries near Andipatti and generate additional income for farmers.
× RELATED மக்களை மகிழ்விக்கும் வகையில்...