உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணிகளுக்கு இனி குதூகலம் அமராவதி அணை பூங்காவை ரூ.3 கோடியில் புதுப்பிக்க திட்டம்-சுறுசுறுப்பாக களம் இறங்கிய பொதுப்பணித்துறை அதிகாரிகள்

உடுமலை : புதர்மண்டி பொலிவின்றி காணப்படும் அமராவதி அணை பூங்காவை ரூ.3 கோடி மதிப்பில் புதுப்பிக்க தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கருத்துரு அனுப்பி, தீவிர நடவடிக்கையில் சுறுசுறுப்பாக களம் இறங்கியுள்ளனர்.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள அமராவதி அணை, முதலை பண்ணை, திருமூர்த்தி மலைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். மூணாறு செல்லும் சுற்றுலா பயணிகள் இப்பகுதிகளையும் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் மாதம் முதல் அமராவதி பகுதி செழிப்பாக காணப்படும். அணையில் நீர் நிறைந்து காணப்படும். அணையின் அடிவாரத்தில் உள்ள பூங்காவும் மரம், செடி, கொடிகள் வளர்ந்து பசுமையாக காட்சி அளிக்கும்.

இருப்பினும், உரிய பராமரிப்பு இல்லாததால் அணை பூங்கா விஷ ஜந்துகளின் புகலிடமாக மாறி புதர்மண்டி கிடக்கிறது. மேலும் இங்கு கழிப்பிட வசதியோ, குடிநீர் வசதியோ கிடையாது. பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதற்கு எந்த உபகரணங்களும் இல்லை. முதியோர் அமர்ந்து இளைப்பாறும் இருக்கைகள் உடைந்து கிடக்கின்றன.

அமராவதி அணையை சுற்றிப்பார்க்க சுற்றுலா பயணிகள் மாதம்தோறும் 6 ஆயிரம் பேர் வருகின்றனர். குறிப்பாக, அமராவதி நகர் சைனிக் பள்ளியில் படிக்கும் தங்கள் குழந்தைகளை காண நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து வரும் பெற்றோர்கள், அமராவதி அணையை சுற்றி பார்க்க வருகின்றனர். இதனால் வழக்கமான நாட்களை விடவும் சனி, ஞாயிறுகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் பூங்கா பராமரிப்பின்றி கிடப்பதால் சுற்றுலா பயணிகள் வேதனை அடையும் சூழல் நிலவுகிறது.

அணை பூங்கா டிக்கெட் வாங்கிக்கொண்டு அணைக்கும், பூங்காவுக்கும் செல்லும் சுற்றுலா பயணிகள் எந்த அடிப்படை வசதியோ, பொழுதுபோக்கு அம்சங்களோ இல்லாதது கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தின், முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் அமராவதி பகுதியை மேம்படுத்த வேண்டும் எனவும், கேரள மாநிலம் மலம்புழா பூங்காவை போல பொலிவுடன் அமைக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், அமராவதி அணை பூங்காவை திருப்பூர் மாவட்ட சுற்றுலா அலுவலரும் கடந்த ஆண்டு  பார்வையிட்டு சென்றார். இதையடுத்து, பொதுப்பணித்துறை சார்பில் அமராவதி பூங்காவை புனரமைக்கும் வகையில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,‘‘உடுமலை அமராவதி அணை பூங்காவில் கழிப்பிட வசதி, அலங்கார நீரூற்று, நடைபாதை, விளையாட்டு உபகரணங்கள், ஓய்வு இருக்கைகள், உணவருந்த மேஜைகள், குடிநீர் வசதி, தொடர் பராமரிப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ளும் வகையில் ரூ.3 கோடியில் அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம். அரசிடம் இருந்து அனுமதி கிடைத்ததும் பணிகள் துவங்கப்படும்’’ என்றார்.

 இதைத்தொடர்ந்து, சிதிலமடைந்து கிடக்கும் அமராவதி பூங்காவுக்கு புதுப்பொலிவூட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் சுறுசுறுப்புடன் களம் இறங்கி நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது, சுற்றுலா ஆர்வலர்களை பெரும் குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories: