மஞ்சூர் அருகே 2ம் நாளாக அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானைகள்

மஞ்சூர் : நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ள இப்பகுதியில் 2 குட்டிகளுடன் 4 பெரிய காட்டு யானைகள் கடந்த சில தினங்களாக நடமாடி வருகின்றன. இந்த யானைகள் கெத்தையை சுற்றிலும் உள்ள வாழை, பாக்கு மற்றும் மலைக்காய்கறி தோட்டங்களில் காட்டுயானைகள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதுடன் நடுராடுகளில் நின்று வாகனங்களை வழிமறிப்பது வாடிக்கையாக உள்ளது.

நேற்று முன்தினம் கோவையில் இருந்து மஞ்சூர் மற்றும் பில்லூர் பகுதிகளுக்கு சென்ற அரசு பஸ்களை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக காட்டு யானைகள் வழிமறித்தது. இதைத்தொடர்ந்து, இரவும் கோவையில் இருந்து பயணிகளுடன் சென்ற அரசு பஸ்சை பெரும்பள்ளம் என்ற இடத்தில் வழிமறித்தது. இந்நிலையில், நேற்று காலை மஞ்சூரில் இருந்து கோவைக்கு சுமார் 40 பயணிகளுடன் அரசு பஸ் புறப்பட்டு சென்றது. கெத்தை பெரும்பள்ளம் இடையே சென்றபோது எதிரில் 2 குட்டிகளுடன் காட்டு யானைகள் சாலையோரத்தில் இருந்த செடி, கொடிகளை பிடிங்கியபடி வழியை மறித்தபடி நின்று கொண்டிருந்தது. இதை கண்ட டிரைவர் பஸ்சை ஓரமாக ஒதுக்கி நிறுத்தினார்.

அப்போது மஞ்சூரில் இருந்து சென்ற 2 தனியார் வாகனங்களும் காட்டு யானைகளால் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து சுமார் அரை மணி நேரம் ரோட்டில் நின்றிருந்த யானைகள் பின்னர் மெதுவாக சாலையோரத்தில் இறங்கி வனப்பகுதிக்குள் சென்றது. இதைத்தொடர்ந்து அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு கோவைக்கு சென்றது.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில்,``மஞ்சூர்-கோவை சாலையில் மீண்டும் 2 குட்டிகளுடன் யானைகள் நடமாடுவதால் இவ்வழியாக வாகனங்களில் செல்வோர் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும். வழியில் யானைகள் கண்டால் வாகனங்களை தொலைவிலேயே நிறுத்த வேண்டும். யானைகளை கண்டவுடன் கூச்சலிடுவது, வாகனங்களில் இருந்து இறங்கி செல்போன்களில் போட்டோ மற்றும் செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடகூடாது. யானைகள் சம்பவ இடத்தில் இருந்து வனப்பகுதிக்குள் செல்வதை உறுதி செய்த பிறகே வாகனங்களை எடுத்து செல்ல வேண்டும். வனத்துறையினரும் காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்’’ என்றனர்.

Related Stories: