×

ஒரு லட்சம் ஏக்கரை வளமாக்கிய நீர் பொக்கிஷம் 66ம் ஆண்டில் அடியெடுத்து வைத்த கே.ஆர்.பி அணை-மலர்தூவி நினைவுகளை பகிர்ந்த விவசாயிகள்

கிருஷ்ணகிரி : தமிழக-கர்நாடக எல்லை மாவட்டமான கிருஷ்ணகிரி, தற்போது விவசாயத்திலும் தொழில் வளத்திலும் முத்திரை பதித்து வருகிறது. இந்த மாவட்டத்தின் வளர்ச்சியும், அடுத்தகட்டத்திற்கான கட்டமைப்பு வசதிகளும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அதே நேரத்தில் 70ஆண்டுகளுக்கு முன்பு வறட்சியின் கோரப்பிடியில் சிக்கிய பகுதிகளில் ஒன்றாக இருந்தது கிருஷ்ணகிரி. உழைப்பு மட்டுமே இங்குள்ள மக்களின் மூலதனமாக இருந்தது. அதிலும் 90சதவீத குடும்பங்கள் விவசாயத்தை நம்பி மட்டுமே தங்கள் வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தது. இதில் தென்பெண்ணை ஆற்றின் கரையை ஒட்டியுள்ள விவசாயிகள் மட்டுமே ஆற்றுநீரை எடுத்து விவசாயம் செய்தனர்.

இதை கருத்தில் கொண்டு, அப்போது காவேரிப்பட்டணம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த நாகராஜ மணியகாரர், தென்பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார். அப்போது போதிய நிதிஇல்லை என்று மறுக்கப்பட்டது. இதையடுத்து காமராஜர் முதல்வராக இருந்த போது இந்த கோரிக்கை வலுத்தது. இதை கவனத்தில் கொண்ட காமராஜர், நிதி பற்றாக்குறை உள்ள நேரத்தில் அணை கட்ட என்ன செய்யலாம்? என்று மூதறிஞர் ராஜாஜியுடன் ஆலோசித்தார்.

அப்போது அவர், ‘‘மத்திய அரசு வறட்சிக்காக நிதி வழங்கும் திட்டம் ஒன்று உள்ளது. அந்தநிதியை பெற்று அணை கட்டலாம் என்று ஆலோசனை வழங்கினார். அதன்பிறகு இரு தலைவர்களும் மேற்கொண்ட துரித முயற்சிகளால் கே.ஆர்.பி.அணை கட்டும் பணி 1955ம் ஆண்டு, ஜனவரி மாதம் 3ம்தேதி தொடங்கியது. கட்டுமான பணிகள் முடிந்து அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு மதகுகள் வழியாக 1957ம் ஆண்டு நவம்பர் 10ம்தேதி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. அப்போதைய அமைச்சர் கக்கன் தலைமையில் முதல்வர் காமராஜர் அணையை திறந்து வைத்தார். அதன்பிறகு வறட்சி மறைந்து வளம் கொழிக்கும் பகுதியாக மாறி நின்று கவனம் ஈர்க்கிறது கிருஷ்ணகிரி. இந்த வகையில் அணை திறக்கப்பட்டு 65ஆண்டுகள் முடிந்து 66ம் ஆண்டு தொடக்க நாளான நேற்று (10ம்தேதி) விவசாயிகள் அங்கு திரண்டனர். மகிழ்ச்சிப் பெருக்கோடு நீரில் மலர்தூவி வழிபட்டு நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தலைவர் ராமகவுண்டர் கூறியதாவது: கர்நாடகாவில் நந்திமலையின் உற்பத்தியாகும் காவிரியின் கிளை நதியான தென்பெண்ணையாறு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நுழைந்து தர்மபுரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களின் வழியாக பாய்ந்து கடலில் கலக்கிறது. தென்பெண்ணையாற்றின் குறுக்கே ஓசூரை அடுத்த கெலவரப்பள்ளியில் கே.ஆர்.பி. அணையும், திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனூர் அணையும் கட்டப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் இந்த அணை கட்டுவதற்கு முன்பு இங்குள்ள மக்கள், பிழைப்புக்காக பெங்களூருக்கு சென்று கூலிவேலைகளை செய்தனர். அணை வந்த பிறகு ஓலைக்குடிசைகள் உருவானது.
பிறகு அந்த குடிசைகளில் கறவை மாடுகள் வளர்ந்தது. விவசாயிகள் வசிப்பதற்கு வீடுகள் கட்டினர். விவசாயத்திற்கான வாகனங்களை வாங்கினர். அவர்களின் வாழ்வில் வளம் பெருகியது. வருவாயும் கிடைக்க ஆரம்பித்தது.

தற்போதைய நிலவரப்படி இந்த அணையால் ஒரு லட்சம் ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பாரூர், சப்பாணிபட்டி பகுதிகளோடு, தர்மபுரி மாவட்டத்தின் காரிமங்கலம் பகுதியிலும் 30ஏரிகள் இந்த அணையால் பயன்பெறுகிறது . இது மட்டுமன்றி இந்த அணையின் நீட்டிப்பு கால்வாய் மூலம் 400 ஏரிகளுக்கு நீர் செல்கிறது. ஒரு ஏரிக்கு 100ஏக்கர் என்ற அளவில் பாசனவசதி கிடைக்கிறது. மொத்தத்தில் இந்த கேஆர்பி அணைக்கட்டு, விவசாய ெபருங்குடி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொண்டே செல்கிறது என்றால் அது மிகையல்ல. இவ்வாறு ராமுகவுண்டர் கூறினார்.

Tags : K. R.R. Farmers , Krishnagiri: Krishnagiri, a Tamil Nadu-Karnataka border district, is currently making its mark in agriculture and industrial development.
× RELATED யானை தாக்கி விவசாயி பலி