விழுப்புரம் அருகே பரபரப்பு ₹10 லட்சம் போலி மதுபாட்டில்களை கடத்தி வந்த மினி லாரி விபத்தில் சிக்கியது

* சினிமாபட பாணியில் போலீசார் சேஸ் செய்தனர்

* மரத்தில் மோதிவிட்டு குற்றவாளிகள் தப்பியோட்டம்

விழுப்புரம் : விழுப்புரம் அருகே ரூ.10 லட்சம் மதிப்பிலான போலி மதுபாட்டில்களை  கடத்தி வந்த மினி லாரி விபத்தில் சிக்கிக் கொண்டது. சினிமா பட பாணியில் போலீசார்  துரத்தி வந்ததால் அவர்களிடமிருந்து தப்பிக்க மரத்தில் மோதிவிட்டு  குற்றவாளிகள் தப்பியோடி விட்டனர்.புதுச்சேரியிலிருந்து, விழுப்புரம்  மாவட்டம் வழியாக மதுபாட்டில், சாராயம் கடத்திச் செல்வதை தடுக்க  எல்லைப் பகுதிகளில் 9 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார்  வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நடமாடும் மதுவிலக்கு அமல்பிரிவு  போலீசாரும் ஆங்காங்கே இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே,  தமிழக எல்லைப்பகுதியான கெங்கராம்பாளையம் சோதனைச் சாவடியில் போலீசார் நேற்று  காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, புதுச்சேரியிலிருந்து  மினிலாரி ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. சந்தேகமடைந்த போலீசார் கையை  காண்பித்து நிறுத்துமாறு கூறினர். ஆனால் போலீசாரை பார்த்ததும் டிரைவர்  லாரியை நிறுத்தாமல் சோதனைச் சாவடியை கடந்து வேகமாக சென்று கொண்டிருந்தார்.பின்னர்,  சினிமாபட பாணியில் சோதனைச் சாவடி போலீசார் இருசக்கர வாகனத்தின் மூலம்  லாரியை துரத்திச் சென்றனர்.

போலீசார் துரத்தி வருவதை அறிந்த லாரி டிரைவர்  இன்னும் வேகத்தை அதிகரித்து சாலையில் தாறுமாறாக சென்று கொண்டிருந்தார்.  இதனால், சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகளும் அச்சமடைந்தனர். இந்நிலையில்,  குடுமியாங்குப்பம் என்ற இடத்தில் செல்லும்போது, போலீசார்  நம்மை மடக்கிப் பிடித்து விடுவார்கள் என்பதை அறிந்த லாரி டிரைவர் சாலையோரமுள்ள  மரத்தில் மினிலாரியை மோதிவிட்டு டிரைவரும், அவருடன் இருந்தவரும்  தப்பியோடிவிட்டனர். பின்னர் அந்த லாரியை சோதனையிட்டபோது, 155  அட்டைப்பெட்டிகளில் 7,440 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

இதன்  மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். ெதாடர்ந்து அந்த லாரி மற்றும் மதுபாட்டில்களை  விழுப்புரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை  நடத்தினர். ேமலும் லாரியிலிருந்த மதுபாட்டில்களை சோதனையிட்டபோது,  போலியானவை என்பதும் தெரியவந்தது. புதுச்சேரி மதுபானங்களை வாங்கி அதனை  போலியாக, வேறு மாநில லேபிள்களை ஒட்டி கடத்தி வந்துள்ளனர். இதுகுறித்து  வழக்குப்பதிவு செய்த போலீசார், போலி மதுபாட்டில்களை கடத்த முயன்றவர் யார்,  இந்த போலி மதுபானங்கள் எங்கிருந்து எங்கு கடத்தப்படுகிறன்றன என்ற கோணத்தில்  போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலி மதுபாட்டில்கள் சென்னைக்கு கடத்தலா?

விழுப்புரம்  போலீசாரிடம் சிக்கிய போலி மதுபாட்டில்கள் சென்னைக்கு கடத்தயிருந்ததாக  போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மதுபாட்டில்களை  கடத்தி வந்த மினிலாரியில் சென்னை பதிவெண் கொண்டுள்ளது. நம்பரை வைத்து  உரிமையாளர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிைடயே,  லாரியில் கடத்தி வரப்பட்ட போலி மதுபாட்டில்களில் தமிழ்நாட்டு மதுபாட்டிலில்  உள்ள லேபிள்கள் இருந்துள்ளது.

சென்னைப் பகுதியில் கள்ளச்சந்தையில் இந்த  போலி மதுபாட்டில் விற்பனை செய்வதற்காக கடத்திச் சென்றிருக்கலாம் என்று  கூறப்படுகிறது. இருப்பினும், லாரி உரிமையாளர், தப்பியோடியவர்களை  பிடித்தால்தான் முழு உண்மையும் வெளிச்சத்திற்கு வரும் என்று போலீசார்  தெரிவித்துள்ளனர்.

Related Stories: