நவ.14ல் அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் சீ சின்பிங் பேச்சுவார்த்தை: வெள்ளை மாளிகை அறிவிப்பு

வாஷிங்டன்: இந்தோனேஷியாவில் நடைபெற உள்ள ஜி-20 உச்சி மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் சீ சின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தோனேஷியாவின் பாலி நகரத்தில் வரும் 14ம் தேதி ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் சீ சின்பிங் உள்பட ஜி-20 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த மாநாட்டிற்கிடையே சீன அதிபரை ஜோ பைடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வரும் 14ம் தேதி ஜோ பைடன், சீ சின்பிங் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தைவான் மீது சீனா ஆதிக்கம் செலுத்துவது தொடர்பாக அமெரிக்கா, சீனா இடையே மோதல் போக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. வர்த்தக தொடர்புகள், நாடு கடந்த சவால்களில் இணைந்து செயல்படுவது மற்றும் நாடுகளிடையே உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேசுவார்கள் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

Related Stories: