×

கனமழை எதிரொலி: புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் அளவு வினாடிக்கு 500 கனஅடியாக அதிகரிப்பு: கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை ..

திருவள்ளூர்: புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கனஅடியாக அதிகரிக்க படவுள்ளது. ஏற்கனவே 10 நாட்களாக புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1000 கனஅடியாக அதிகரிப்பால் 10.30 மணி அளவில் 500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட உள்ளதால் கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த  தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. நேற்று இரவு முதலே திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மலை பெய்து வருகிறது. குறிப்பாக பொன்னேரியில் 7 செ.மீ. மழையும், சோளவரத்தில் 6 செ.மீ. மழையும், செங்கல்பட்டில் 5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

கனமழையின் காரணமாக நீர்நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னைக்கு குடிநீர் வழங்க கூடிய ஏரிகளில் ஒன்றான புழல் ஏரிக்கு நேற்று 118 கனஅடியாக இருந்த நீர் வரத்தானது இன்று (11-11-2022)காலை 6 மணி நிலவரபரப்படி 558 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது.

புழல் ஏரியானது 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டது. இதில் இன்று காலை நிலவரப்படி 2,738 கனஅடியாக நீர் இருப்பு உள்ளது. சுமார் 83% புழல் ஏரி நிரம்பியுள்ளது. ஏற்கனவே 10 நாட்களாக சுமார் 100 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக இன்று அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் புழல் ஏரிக்கு நீர் வரத்தானது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. காலையில் 558 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 1000 கனஅடியாக அதிகரித்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக புழல் ஏரியில் இருந்து பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றம் என்பது 100 கனஅடியில் இருந்து 500 கனஅடியாக அதிகரிக்க பட உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். உபரிநீர் திறப்பு அதிகரிக்கபடவுள்ளதால், உபரி நீர் கால்வாய் ஓரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Heavy rain reverberation, Puzhal lake, overflow, warning for coastal villages..
× RELATED மீண்டும் வாக்குச் சீட்டு முறை...