×

வழக்குகளை விசாரணைக்கு பட்டியலிட உச்ச நீதிமன்றத்தில் புதிய நடைமுறை: பதவியேற்றதும் தலைமை நீதிபதி அதிரடி

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் புதிய வழக்குகளை குறிப்பிட்ட கிழமைகளில் பட்டியலிடும் புதிய நடைமுறையை செயல்படுத்த, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் ரிட், மேல்முறையீடு, இடையீட்டு மனு மற்றும் பொதுநலன் வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. இவற்றை உச்ச நீதிமன்ற பதிவாளர் முதலில் பரிசீலிப்பார். பின்னர், அந்த மனுவில் பிழைகள் ஏதும் இல்லாத பட்சத்தில், தலைமை நீதிபதியின் பார்வைக்கு கொண்டு செல்வார். அவற்றை பரிசீலிக்கும் தலைமை நீதிபதி, அவற்றை உரிய அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடும்படி பதிவாளருக்கு உத்தரவிடுவார்.

இது போன்ற நடைமுறைகள் தாமதமாகும் பட்சத்தில், தங்களின் மனுவை அவசரமாக எடுத்து விசாரிக்கும்படி, மனுதாரர்கள் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள், தலைமை நீதிபதி அமர்வில் கோரிக்கை விடுக்கும் நடைமுறை தற்போது பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நேற்று முன்தினம் பதவியேற்ற சந்திரசூட், மறுநாளே இந்த நடைமுறையில் மாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், ‘உச்ச நீதிமன்றத்தில் திங்கள், செவ்வாய், சனிக் கிழமைகளில் பதிவு செய்யப்படும் அனைத்து வழக்குகளும், அடுத்த திங்கட்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்படும். வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பதிவு செய்யப்படும் வழக்குகள் அனைத்தும் மறுவாரம் வெள்ளிக்கிழமை பட்டியலிடப்படும்,’ என கூறப்பட்டுள்ளது.


Tags : Supreme Court ,Justice , New procedure in Supreme Court to list cases for trial: Chief Justice takes action after taking oath
× RELATED கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான...