இம்ரான் சுடப்பட்ட அதே இடத்தில் இருந்து பேரணி

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தான் சுடப்பட்ட இடத்தில் இருந்து நேற்று மீண்டும் பேரணியை தொடங்கினார். பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வசிராபாத்தில் கடந்த 3ம் தேதி நடந்த பேரணியின் போது சுடப்பட்டார். இதில் இம்ரான் கான் உள்பட 11 பேர் காயமடைந்தனர். அவரது கட்சி தொண்டர் மோஜாம் கொண்டல் பலியானார். இம்ரானுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த இம்ரான்கான், பேரணியை மீண்டும் தொடங்க திட்டமிட்டிருப்பதாக கூறினார். முதலில் செவ்வாய் கிழமை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நேற்று பேரணி தொடங்கியது. இதில், பிடிஐ கட்சியின் துணைத் தலைவரும் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஷா முகமது குரேஷி, பஞ்சாப் மாகாண பிடிஐ தலைவரும் சுகாதார அமைச்சருமான யாஸ்மின் ரஷித் கலந்து கொண்டனர். இந்த பேரணி இஸ்லாமாபாத் அடைந்ததும், அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் இம்ரான் கலந்துகொண்டு பேசுகிறார்.

* புதிய தளபதி தேர்வு

எகிப்தில் நடக்கும் பருவநிலை மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அங்கிருந்து லண்டன் சென்று தனது சகோதரர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து பேசுகிறார். பாக். ராணுவத் தளபதி உமர் ஜாவித் பஜ்வா வரும் 29ம் தேதியுடன் ஓய்வுபெறுவதால், புதிய தளபதி நியமனம் பற்றி முடிவு எடுக்கவே நவாசை அவர் சந்திப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: