×

திருவனந்தபுரம் மேயரை கண்டித்து நடந்த எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில் தடியடி: கண்ணீர் புகை குண்டு வீச்சு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் பரபரபு ஏற்பட்டது. திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக இருப்பவர் ஆர்யா ராஜேந்திரன். இவர்தான் நாட்டின் இளம் மேயர் என்ற பெருமையை பெற்றவர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன், மாநகராட்சியில் 295 தற்காலிக பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அதில் நியமனம் செய்வதற்கு கட்சிக்காரர்கள் குறித்த விவரங்களை அனுப்பி வைக்குமாறு சிபிஎம் திருவனந்தபுரம் மாவட்ட செயலாளருக்கு அனுப்பிய கடிதம் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், ஆர்யா ராஜேந்திரன் பதவி விலகக் கோரி கடந்த சில தினங்களாக திருவனந்தபுரம் மாநகராட்சி அலுவலகம் முன் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

 இந்நிலையில் நேற்றும் போராட்டம் நடைபெற்றது. முதலில் இளைஞர் காங்கிரசாரும், பின்னர் மகளிர் காங்கிரசாரும், அதன் பிறகு பாஜகவின் இளைஞரணி தொண்டர்களும் அடுத்தடுத்து மாநகராட்சி அலுவலகம்  முன் குவிந்தனர். போலீஸ் பாதுகாப்பை மீறி போராட்டக்காரர்கள் மாநகராட்சி அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டினர். ஆனால் யாரும் கலைந்து செல்லாததால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அப்போது கலைந்து ஓடிய தொண்டர்கள் மீண்டும் திரண்டு வந்து மாநகராட்சி அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை தடியடி நடத்தி விரட்டினர். இதில் ஏராளமானோர் காயமடைந்தனர்.  இந்த சம்பவத்தால் திருவனந்தபுரம் மாநகராட்சி அலுவலகம் முன் நேற்றும் பல மணி நேரம் பதற்றம் நிலவியது.

* உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
திருவனந்தபுரம் மாநகராட்சியில் சட்டத்தை மீறி தற்காலிக பணியிடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை நியமிக்க முயற்சித்த மேயர் ஆர்யா ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை பரிசீலித்த உயர்நீதிமன்றம், கேரள அரசு மற்றும் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

Tags : Thiruvananthapuram , Opposition protests against Thiruvananthapuram mayor caned: Tear gas fired
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!