×

அசாம் - மேகாலயா எல்லை மோதல் இம்மாத இறுதியில் 2வது சுற்று பேச்சு: முதல்வர் சங்மா அறிவிப்பு

ஷில்லாங்: ‘அசாம் -மேகாலயா எல்லை பிரச்னை தொடர்பாக இந்த மாதத்தின் இறுதிக்குள் 2வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும்,’ என மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தெரிவித்துள்ளார். அசாம்  -மேகாலயா மாநிலங்களுக்கு இடையேயான எல்லையில் 12 இடங்கள் நீண்ட காலமாக மோதல் இருந்து வருகிறது. இதனால், இருமாநிலத்துக்கும் இடையே அடிக்கடி இந்த எல்லையில் மோதல், வன்முறைகள் நடந்து வந்தன. இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா எடுத்த முயற்சியின்படி, இரு மாநில முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில்ல, முதல் கட்ட பேச்சுவார்த்தையின்போது 6 இடங்களுக்கான மோதலில் தீர்வு காணப்பட்டது. இது தொடர்பாக கடந்த மார்ச்சில் இரு மாநிலங்களுக்கு இடையே ஒப்பந்தமும் கையெழுத்தானது.

இந்நிலையில், 2வது சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா நேற்று தெரிவித்தார். அமைச்சரவை  கூட்டத்துக்கு பிறகு அவர் அளித்த பேட்டியில், ‘இந்த மாத இறுதிக்குள் இரு மாநிலங்களும் பிரச்னை நிலவி வரும் மேலும் 6 இடங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும்,’ என்றார். அதே போல் அசாம்-மிசோரம் இடையேயான எல்லை பிரச்னை தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில், இரு மாநிலங்களுக்கு இடையேயான 3வது சுற்று பேச்சுவார்த்தை வரும் 17ம் தேதி நடக்கும் என்று அசாம் உள்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தை முதலில் நவம்பர் 4 ஆம் தேதி திட்டமிடப்பட்டது, ஆனால் ஜனாதிபதி திரௌபதி முர்மு மிசோரம் வந்ததால் நடைபெறவில்லை.

Tags : Assam ,Meghalaya ,Chief Minister ,Sangma , Assam-Meghalaya border conflict 2nd round of talks later this month: CM Sangma to announce
× RELATED மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...