×

இமாச்சல் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு

சிம்லா: இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலை ஒய்ந்தது. இமாச்சல் பிரதேசத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. 68 தொகுதிகளை கொண்ட இதற்கு, ஒரே கடடமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இறுதி நாளான நேற்று அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாஜ தேசிய தலைவர் நட்டா, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா என அனைத்துகட்சி தலைவர்கள், வீதிவீதியாக சென்று இறுதி கட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். காங்கிரஸ் சார்பில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பேரணி நடந்தது. தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டு உள்ளது. தொலைதூர மலை பிரதேசங்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலமாக வாக்குப்பெட்டிகள் எடுத்து செல்லப்பட்டன.

இந்நிலையில், பிரியங்கா காந்தி பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களித்த ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க வேண்டும். இது, ஒவ்வொரு ஊழியரின் உரிமை. இதை மனதில் வைத்து சட்டீஸ்கர், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி உள்ளன. பழைய ஓய்வூதியத்தை ரத்து செய்ததன் மூலம், நாட்டில் உள்ள முதியோர்களின் நிதி பாதுகாப்பை பாஜ பறித்துள்ளது. வாழ்நாள் முழுவதும் நாட்டிற்கு சேவை செய்பவர்கள், முதுமையில் எங்கு செல்வார்கள்? பாஜ.வுக்கு பறிக்க மட்டுமே தெரியும். நாட்டை காக்கும் நமது வீரர்கள். எல்லையில் உயிரை பணயம் வைக்கின்றனர். அவர்களின் பொருளாதார பாதுகாப்பும் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகிறது. இமாச்சல பிரதேசம், குஜராத் மாநிலங்களிலும் ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது,’ என்று கூறியுள்ளார்.

Tags : Himachal Election , Himachal Election campaigning is over: Polling tomorrow
× RELATED இமாச்சலில் நவ.12ம் தேதி தேர்தல்:...