×

குஜராத்தில் பாஜ முதல் கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு மாஜி முதல்வர் உட்பட 38 பேருக்கு சீட் மறுப்பு: கிரிக்கெட் வீரர் ஜடேஜா மனைவி, ஹர்திக் படேலுக்கு வாய்ப்பு

அகமதாபாத்: குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான பாஜ.வின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், முன்னாள் முதல்வர் உட்பட 38 தற்போதைய எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. குஜராத் சட்டபேரவை தேர்தல் அடுத்த மாதம் 1, 5ம் தேதிகளில் 2 கட்டமாக நடைபெறுகிறது. இங்கு, காங்கிரஸ், பாஜ, ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இதனால், கடந்த கால தேர்தல்களை விட, இந்த முறை தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. இந்நிலையில், முதற்கட்டமாக 160 பேர் அடங்கிய பாஜ வேட்பாளர் பட்டியலை ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவ்  நேற்று வெளியிட்டார்.

இதில், படிதார் இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு தலைமை வகித்து பரபரப்பை ஏற்படுத்தி காங்கிரசில் சேர்ந்த பிறகு பாஜ.வுக்கு தாவிய ஹர்திக் படேல், பிரபல கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். தற்போதைய எம்எல்ஏக்கள் 69 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் விஜய் ருபானி, முன்னாள் துணை முதல்வர் நிதின் படேல், சபாநாயகர் நிமா ஆச்சார்யா மற்றும் 5 அமைச்சர்கள் உட்பட 38 பேருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. முதல்வர் பூபேந்திர படேல் கட்லோடியா தொகுதியில் போட்டியிடுகிறார்.

* 3வது காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மோகன்சிங் ரத்வா மற்றும் பக்வான் பரத் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததோடு கட்சியில் இருந்தும் விலகினார்கள். இவர்கள் இருவரும் பாஜவில் சேர உள்ளனர். இந்த சூழலில் மூன்றாவதாக மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளார். தஹோத் மாவட்டத்தில் உள்ள ஜாலட் சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவான பவேஷ் கடாரா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சபாநாயகர் நிமாபென் ஆச்சார்யாவை சந்தித்த அவர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இவரும் விரைவில் பாஜவில் இணைகின்றார்.

* கட்சி மாறியவர்களுக்கு சீட்
கடந்த 2017ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, காங்கிரசில் இருந்து 18க்கும் மேற்பட்ட எம்எல்ஏ.க்கள் பாஜவில் இணைந்தனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு அவர்களுடைய சொந்த தொகுதியிலேயே போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சமீபத்தில் கட்சி மாறிய மோகன் சிங் ரத்வாக்கு பதில் அவரது மகன் ராஜேந்திர சிங் ரத்வா, பகவான் பரத் உள்ளிட்டோர் டிக்கெட் பெற்றுள்ளனர். ஆனால், காங்கிரசில் இருந்து விலகி பாஜ.வில் சேர்ந்த அல்பேஷ் தாக்குர், பரசோத்தம் சபாரியாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

* மோர்பி ஹீரோவுக்கு வாய்ப்பு
குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த தொங்கு பாலம் விபத்தில் 135 பேர் பலியாயினர். இது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த தொகுதியின் தற்போதைய பாஜ எம்எல்ஏ பிரிஜேஷ் மெர்ஜாவுக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக, விபத்தின் போது தண்ணீரில் குதித்து பலரை  காப்பாற்றிய முன்னாள் எம்எல்ஏ காந்திலால் அம்ருத்தியாவுக்கு சீட்  வழங்கப்பட்டு உள்ளது.

Tags : BJP ,Gujarat ,Jadeja ,Hardik Patel , BJP announces first phase candidates in Gujarat Denial of seats to 38 including former CM: Cricketer Jadeja's wife, Hardik Patel's chance
× RELATED மீண்டும் பாஜ ஆட்சிக்கு வந்தால் 2024...