×

எல்கர் பரிஷத் வழக்கில் சிறையில் உள்ள நவ்லகாவுக்கு வீட்டுக்காவல்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: எல்கர் பரிஷத் வழக்கில் சிறையில் உள்ள நவ்லகாவுக்கு நிபந்தனைகளுடன் ஒரு மாதம் வீட்டு காவல் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்கர் பரிஷத் வழக்கில் சிறையில் உள்ள 70 வயதாகும் நவ்லகாவுக்கு பல்வேறு உடல்நலக் கோளாறு இருப்பதால் அவரை வீட்டு சிறைக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, ‘நவ்லகாவுக்கு எதுவும் ஆகாது. அவருக்கு சிறையில் வேண்டிய வசதிகளை செய்து  தருகிறோம். நவ்லகா போன்றவர்கள் இந்த நாட்டை அழிக்க நினைக்கிறார்கள்,’ என்று என்ஐஏ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ வாதிட்டார்.

இதைக் கேட்டு ஆவேசமடைந்த நீதிபதிகள், ‘‘உண்மையிலேயே இந்த நாட்டை அழிப்பவர்கள் யார் தெரியுமா? ஊழல்வாதிகள்தான்,’ என கடுமையாக கூறினர். பின்னர், ‘நவ்லகாவை நாங்கள் வீட்டு காவலில் அனுப்பலாம் என நினைக்கிறோம். அதற்கு என்னென்ன கட்டுப்பாடுகளை என்ஐஏ விதிக்கும் என்பதை தெரிவிக்க வேண்டும்,’ என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘எதிர்வரும் காலங்களில் இந்த வழக்கு முடிவை நோக்கி முன்னேறும் என்பது சாத்தியமில்லை.

எனவே, நவ்லகாவை மும்பையில் ஒரு மாதம் வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிடுகிறோம். இந்த உத்தரவை 48 மணி நேரத்திற்குள் அமல்படுத்த வேண்டும். தனது பாதுகாப்பு செலவாக என்ஐஏ கூறும் ரூ.2.4 லட்சத்தை நவ்லகா டெபாசிட்டை செய்ய வேண்டும். வீட்டுக் காவலின் போது அவர் கணினி, இணையத்தைப் பயன்படுத்தக் கூடாது. போலீசார் வழங்கும் வழங்கும் இன்டர்நெட் இல்லாத மொபைல் போனை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார். தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் அனுமதிக்கப்படும்’ என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டனர் .

Tags : Navlaka ,Elgar Parishad ,Supreme Court , House arrest for jailed Navlaka in Elgar Parishad case: Supreme Court orders
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...