தமிழக பெண்கள் வெளிநாட்டுக்கு கடத்தல்: திருவண்ணாமலை ஏஜென்ட் கைது

திருவனந்தபுரம்: போலி  ஆவணங்கள் தயாரித்து தமிழ்நாடு, ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண்களை  வெளிநாட்டுக்கு கடத்திய திருவண்ணாமலையை சேர்ந்த ஏஜென்டை எர்ணாகுளம் போலீசார் கைது செய்தனர். கடந்த ஜூன் 15ம் தேதி  குவைத் செல்வதற்காக தமிழ்நாடு, ஆந்திராவைச் சேர்ந்த 7 இளம்பெண்கள் கொச்சி விமான நிலையம் வந்தனர். அவர்களின் பாஸ்போர்ட், விசா ஆவணங்களை  விமான நிலைய அதிகாரிகள் பரிசோதித்த போது அவை போலி என்பது தெரிந்தது. இதனால், அவர்கள் 7 பேரையும் போலீசிடம் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருவண்ணாமலையை சேர்ந்த பசலுல்லா (53) என்ற ஏஜெண்ட்தான் போலி  ஆவணங்களை தயாரித்து இவர்களை குவைத்துக்கு கடத்த முயன்றுள்ளார். வீட்டு வேலைக்கு என்று கூறி, குவைத்தில் உள்ள ஏஜென்டிடம் இவர்களை  ஒப்படைக்க திட்டமிட்டுள்ளார். இவர்களின் பாஸ்போர்ட்டில் முறைகேடுகள் செய்யப்பட்டிருந்தன. வேலைக்கு என்று கூறி சுற்றுலா விசாவை மட்டுமே இவர்களுக்கு எடுத்திருந்தார். தமிழ்நாடு, ஆந்திராவின் கிராமப்புறங்களில் படிப்பறிவு இல்லாத, வறுமையில் வாடும் இளம்பெண்களை அணுகி, அதிக சம்பளம் தருவதாக கூறி பலரை குவைத்துக்கு கடத்தியதும் விசாரணையில்  தெரிய வந்துள்ளது. அவரை தேடிய கேரள தனிப்படை போலீசார், தமிழக போலீசின் உதவியுடன் நேற்று கைது செய்து கேரளா அழைத்து சென்றனர். அவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது.

Related Stories: