×

அதிமுக பிரமுகர் இல்ல திருமண நிகழ்சிக்காக சாலையை ஆக்கிரமித்து வைத்த பேனரால் முதியவர் பரிதாப பலி

சென்னை: பொது இடங்களில் அனுமதியின்றி பேனர்கள் வைக்க கூடாது. மீறால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை மீறி, அம்பத்தூரை சேர்ந்த அதிமுக பிரமுகர் மகாலிங்கம், தனது இல்ல திருமணத்தை முன்னிட்டு நேற்று மாலை  திருமுல்லைவாயில் பகுதியில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருந்து திருமுல்லைவாயில் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு, சாலையின் இரண்டு புறமும் ராட்சத பேனர்கள் வைத்திருந்தார்.

மேலும், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் சாலையின் முக்கிய சந்திப்புகளின் இருபுறமும், சாலைகளின் நடுவிலும் பேனர்கள் வைத்தனர். இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், வாகன ஓட்டிகள் பாதசாரிகள் என பொதுமக்கள் அனைவரும் பாதிப்புக்குள்ளாகினர். இந்நிலையில், திருமுல்லைவாயல் ஸ்ரீதேவி நகரை சேர்ந்த ராமையா (80) நேற்று மாலை 6 மணியளவில், திருமுல்லைவாயல் பிரதான சாலையை கடக்க முயற்சித்தார். அப்போது, ஆவடியில் இருந்து அம்பத்தூர் நோக்கி பைக்கில் சென்ற நபர், சாலையோரத்தில் வைத்திருந்த அதிமுக பேனர்களை பார்த்தப்படி தனது வாகனத்தை வேகமாக ஓட்டியதால் திடீரென முதியவர் மீது மோதியுள்ளார். இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தவர் பலியானார்.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆவடி போக்குவரத்து போலீசார், முதியவர் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பூந்தமல்லி புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதில், விபத்தை ஏற்படுத்தியவர், செங்குன்றம் பூச்சி அத்திப்பேடை சேர்ந்த புருஷோத்தமன், (32) வெல்டிங் தொழிலாளி என தெரிய வந்தது. இந்த விபத்தில் அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக  அனுப்பி வைத்தனர்.


Tags : AIADMK , Old man tragically killed by banner occupying road for AIADMK dignitary's wedding function
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...