மாங்காட்டில் பரிதாபம் கால்வாய் பள்ளத்தில் விழுந்த கூலிதொழிலாளி உயிரிழப்பு: எச்சரிக்கை பலகை வைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

பல்லாவரம்: மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக, மாங்காட்டில் இருந்து மலையம்பாக்கம் செல்லும் பிரதான சாலையிலும் பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. இந்த பள்ளத்தில் அதிக அளவில் மழைநீர் தேங்கி இருந்தது. நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் எதேச்சையாக உள்ளே பார்த்தபோது, அங்கு ஒருவர் இறந்த நிலையில் தலை குப்புற கவிழ்ந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, உடனடியாக மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இறந்த உடலை மீட்டு, அதனை பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பினர்.

மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அதில், இறந்தவர் மாங்காடு, பாலான்டேஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்த லட்சுமிபதி (42) என்பது தெரியவந்தது. இவர், அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் பணி செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி சங்கீதா என்ற மனைவியும், 1 மகனும், 1 மகளும் உள்ளனர். வேலைக்கு செல்வதாக வீட்டில் இருந்து கிளம்பி சென்றவர். அப்போது, நிலை தடுமாறி இந்த மழைநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் விழுந்து மூச்சு திணறி இறந்தது தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். பணிநடைபெறும் இடத்தில் எச்சரிக்கை பலகை வைக்க பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: