புழல் சிறைச்சாலையில் ரத்த வாந்தி எடுத்த கைதி கவலைக்கிடம்: போலீசார் விசாரணை

புழல்: புழல் சிறையில் ரத்த வாந்தி எடுத்த கைதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக, புழல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். புழல் மத்திய சிறை வளாகத்தில் ஆண்கள், பெண்கள் என, சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில், கடந்த 2021ம் ஆண்டு, டிசம்பர் மாதம் தாம்பரம் போலீசாரால் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ஆவடி, காந்தி நகரை சேர்ந்த வினோத்குமார் (22) என்ற விசாரணை கைதி, நேற்று முன்தினம் இரவு திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்து, அதிர்ச்சியடைந்த சக கைதிகள் சிறைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, அங்கு விரைந்து வந்த போலீசார், வினோத்குமாரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, புழல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: