புரளிகளை நம்ப வேண்டாம் திருப்பதி லட்டு எடை குறைக்கப்படவில்லை: திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்

திருமலை: சமூக வலைதளத்தில் வரும் தவறான கருத்துக்களை நம்ப வேண்டாம் என்றும், திருப்பதி கோயில் லட்டு எடை குறையாமல் 160-180 கிராம் வரை இருக்கிறது என்று தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. கூடுதல் லட்டுகள் தேவை என்றால்  ஒரு லட்டு ரூ.50 என விற்கப்படுகிறது. இந்த லட்டின் எடை குறைத்திருப்பதாக பக்தர் ஒருவர் வீடியோ வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தார்.

இதற்கு தேவஸ்தான நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது. லட்டு பிரசாதம் 160 கிராம் முதல் 180 கிராம் வரை இருக்கும். தினமும் லட்டு தயாரிக்கும் பணியில் உள்ள ஊழியர்கள் தயாரித்த லட்டுகள் தனித்தனி தட்டுகளில் வைக்கின்றனர். பின்னர், ஒவ்வொரு தட்டும் எடை போட்டு அதிகாரிகள் மூலம் சரிபார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்தே, லட்டு பிரசாதங்கள் கவுன்டர்களுக்கு கொண்டு சென்று பக்தர்களுக்கு வழங்கப்படும். எனவே,  முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்தப்படுகிறது. லட்டு எடை சரியாக 160 முதல் 180 கிராம் வரை இருக்கும்.  லட்டு பிரசாதம் பல நூறு ஆண்டுகளாக மிகுந்த பக்தியுடன் தயாரிக்கப்படுகிறது. லட்டுகளின் எடை மற்றும் தரத்தில் தேவஸ்தானம் ஒருபோதும் சமரசம் செய்து கொள்வதில்லை. சமூக வலைதளங்களில் வரும்  தவறான கருத்துகளை பக்தர்கள் நம்ப வேண்டாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: