மதுரை விமான நிலையத்தில் மோடியுடன் இபிஎஸ் - ஓபிஎஸ் இன்று சந்திப்பு: தனித்தனியாக பேச அனுமதி

மதுரை: காந்திகிராம பல்கலை பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தரும் பிரதமர் மோடியை, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் மதுரையில் தனித்தனியாக சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் அருகே காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று மாலை நடக்கிறது. இதில் பங்கேற்க வரும் பிரதமர் மோடியை, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் மதுரை விமானநிலையத்தில் அடுத்தடுத்து சந்திக்க இருக்கின்றனர். ஏற்கனவே இவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதைத்தொடர்ந்து, 12ம் தேதி சென்னை வரும் அமித்ஷாவை, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தனித்தனியாக சந்திக்க திட்டமிட்டிருந்தனர். இதற்கிடையில் தற்போது மதுரையில் பிரதமர் மோடியை அவர்கள் சந்திக்க இருக்கும் தகவல் வெளிவந்துள்ளது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில்,  கடந்த செப். 20ம் தேதி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தபோதும், பிரதமர் மோடியை சந்திக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றத்துடன் திரும்பினார்.

ஓ.பன்னீர்செல்வமும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் பிரதமர் மோடியை சந்திப்பது தோல்வியில்தான் முடிந்தது. இந்நிலையில்தான், திண்டுக்கல் அருகே காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு இன்று வரும் பிரதமர் மோடியைச் சந்திக்க இருவருமே அனுமதி கேட்டிருந்தனர். இருவரையும் நேரில் சந்திக்க பிரதமர் மோடி தற்போது அனுமதி அளித்திருப்பதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி இன்று காலை 9.30 மணி விமானத்தில் சென்னையில் இருந்து கிளம்பி மதுரை விமானநிலையம் வருகிறார். இதைப்போலவே ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து காலை 10.50 மணி விமானத்தில் கிளம்பி மதுரை வருகிறார்.

பிரதமர் மோடி பயண திட்டம் ஏற்கனவே இறுதி செய்யப்பட்ட நிலையில், இபிஎஸ், ஓபிஎஸ் இருவருக்கும் ஒரே சமயத்தில் நேரம் ஒதுக்கித்தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இருவரில் ஒருவர், மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடி வரும்போது வரவேற்பதாகவும், பிரதமர் மோடி திரும்பி செல்லும்போது ஒருவர் வழியனுப்புவதாகவும் இருவருக்குமே அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதில் பிரதமர் மோடி இருவரிடமும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிகிறது. முன்னதாக முன்பு செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பிரதமர் மோடி வந்த போது, ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் சந்திக்க நேரம் கேட்கப்பட்டு, விமான நிலையத்தில் பிரதமர் இறங்கும்போது எடப்பாடி பழனிசாமிக்கும், திரும்பிச் செல்லும்போது ஓ.பன்னீர்செல்வத்திற்கும் நேரம் வழங்கப்பட்டது. இதே பாணியில் மதுரையிலும் நேரம் ஒதுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: