திருமங்கலம் அருகே பயங்கரம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் பலி: 13 பேர் படுகாயம்

திருமங்கலம்: திருமங்கலம் அருகே நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 13 பேர் படுகாயமடைந்தனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில், செக்கானூரணியை சேர்ந்த வெள்ளையன் மனைவி அனுஷியா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு அழகுசிறை, காண்டை, வடக்கம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பணி செய்து வருகின்றனர். இந்த ஆலையில் மிக அதிக சத்தத்துடன் வெடிக்கும் அதிர்வேட்டு வெடிகளான வடக்கம்பட்டி பட்டாசு தயாரிக்கப்படுகிறது. நேற்று பகல் 1 மணியளவில் பெரும்பாலான பணியாளர்கள் உணவருந்த ஆலையின் வெளிப்புறப்பகுதிக்கு சென்றிருந்தனர். அப்போது மருந்து கலவை சேர்க்கும் அடுத்தடுத்த இரு அறைகளில்  4 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.  

மருந்துக்கலவையை பட்டாசில் செலுத்தும்போது உராய்வு ஏற்பட்டு, பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அந்த 2 அறைகளும் முற்றிலும் தரைமட்டமானது. உள்புறம் பணியில் இருந்த 4 தொழிலாளர்கள், 50 அடி தூரத்திற்கு உடல்கள் சிதறி பரிதாபமாக இறந்தனர். கட்டிடச் சிதறல்கள் தாக்கியதில் அருகில் உணவருந்தியும், வெளியில் நின்று பேசிக்கொண்டும் இருந்தவர்களில் பல தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். வெடிவிபத்து சத்தம் 4 கி.மீ தூரத்துக்கு பயங்கரமாக கேட்டுள்ளது. இதனால் சுற்றுவட்டார கிராமத்தினர் அங்கு ஓடி வந்தனர். தொடர்ந்து பட்டாசுகள் வெடித்தபடி இருந்ததால் அருகில் செல்ல அஞ்சினர். தகவலறிந்து வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். காயமடைந்தவர்களை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, இடிபாடுகளில் யாரும் சிக்கியுள்ளனரா என்றும் தேடிப்பார்த்தனர்.

விபத்தில், மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே கழுங்குபட்டியைச் சேர்ந்த அம்மாசி (50), வடக்கம்பட்டியைச் சேர்ந்த வல்லரசு (20), கோபி (26), புளியகவுண்டன்பட்டியைச் சேர்ந்த விக்கி (25) ஆகிய 4 பேர் உடல் சிதறி உயிரிழந்திருப்பது தெரிந்தது. அழகுசிறையைச் சேர்ந்த பிரேமா என்கிற ரகுபதி கொண்டம்மாள் சிகிச்சைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்தார். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆனது. மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 5 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் மகாலட்சுமி என்பவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மற்றவர்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவலறிந்து அமைச்சர் பி.மூர்த்தி, திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், உதயகுமார் எம்எல்ஏ, கலெக்டர் அனீஷ் சேகர், எஸ்பி சிவபிரசாத், டிஐஜி பொன்னி உள்ளிட்டோர் அங்கு வந்து பார்வையிட்டனர். அமைச்சர் மூர்த்தி கூறுகையில், விபத்து குறித்து கலெக்டர் தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்றார்.

Related Stories: