குடும்ப தகராறு காரணமாக சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமன் மனைவி தற்கொலை முயற்சி: தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

சென்னை: குடும்ப தகராறு காரணமாக சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமன் மனைவி கீர்த்தனா அதிகளவில் மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர், தற்போது ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமன். ஜாய்ஸ் சினிமா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் இவருக்கு ஜெயலலிதா தலைமையில் கடந்த 2016ம் ஆண்டு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் ஜெயலலிதா விவேக் திருமணத்துக்கு செல்லவில்லை.

அதற்கு பதில் வாழ்த்து கடிதம் மற்றும் பரிசு பொருட்கள் அனுப்பி வைத்தார். பிறகு சசிகலாவின் தலைமையில் விவேக்- கீர்த்தனா தம்பதிக்கு வெகு விமரிசையாக திருமணம் நடந்தது. இந்நிலையில் விவேக் ஜெயராமன் தனது மனைவியுடன் எம்ஆர்சி நகரில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், இதுகுறித்து கீர்த்தனா தனது மாமியாரான இளவரசி மற்றும் திருமணத்தை நடத்தி வைத்த சசிகலாவிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், விவேக்கை அவர்கள் யாரும் கண்டிக்கவில்லை என்று தெரிகிறது.

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு மீண்டும் விவேக் ஜெயராமனுக்கும், மனைவி கீர்த்தனாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கீர்த்தனா வீட்டில் வைத்திருந்த மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். சிறிது நேரத்தில் கீர்த்தனா மயங்கியதாக கூறப்படுகிறது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விவேக் ஜெயராமன் மனைவியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தார். பின்னர் டாக்டர்கள் பரிந்துரையின்படி, அடையாறில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கீர்த்தனா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மருத்துவமனை அளித்த தகவலின்படி பட்டினப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: