×

முறையற்ற வகையில் பணியமர்த்தம் பணி வரன்முறை செய்யப்படாதவர்களுக்கு பணிப்பலன்கள் வழங்க வேண்டும்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

சென்னை: முறையற்ற வகையில் பணியமர்த்தம் செய்யப்பட்டு பணி வரன்முறை செய்யப்படாத பணியாளர்களுக்கு பணிப்பலன்கள் வழங்க அறிவுரைகள் வழங்கியிருத்தல் தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இது குறித்து அவர் அனுப்பிய சுற்றறிக்கை: கடந்த 1980ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி முதல் 2001ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி வரையுள்ள காலத்தில் முறையற்ற வகையில் பணிநியமனம் செய்யப்பட்டு பணி வரன்முறைப்படுத்தப்படாத பணியாளர்களில் தொகுப்பூதியம், தினக்கூலி அடிப்படையில் ஊதியம் பெற்றுவரும் பணியாளர்களுக்கு சில நிபந்தனைகளுக்குட்பட்டு அவர்களின் பணியிடத்திற்கான காலமுறை ஊதிய விகிதத்தில் தொடக்க நிலையில் கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஊதியத்தினை நிர்ணயம் செய்ய அறிவுரைகள் வழங்கப்பட்டது. பின்னர் கடந்த 1980ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி முதல் 2001ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி வரை முறையற்ற வகையில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிநியமனம் செய்யப்பட்டு பணிவரன்முறைப்படுத்தப்படாத பணியாளர்களுக்கு பணிப்பலன்கள் வழங்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

சங்கத்தில் பணியாற்றி பணியிலிருந்து ஓய்வுறும் வயதை நிறைவு செய்திடும் பட்சத்தில் அத்தகு பணியாளர்களுக்கு பணிமுடிவு காலத்தில் வழங்கப்பட வேண்டிய ஓய்வுகால பணப்பலன்கள் வழங்கிடலாம். கூட்டுறவுச் சங்கப்பணியாளர்களுக்கு பதிவாளரால் ஒப்பளிக்கப்பட்டபடி புதிய சம்பள விகிதம் நிர்ணயம் செய்யும் போது ஒவ்வொரு பதவியில் பணிபுரியும் பணிவரன்முறைப்படுத்தப்படாத கடந்த 2001ம் ஆண்டு மார்ச் 12ம் தேதிக்கு முன்னர் பணியமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கு புதிய சம்பள விகிதம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். பதவிக்கான காலமுறை விகிதத்தின் தொடக்க நிலையில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்ட பிறகு அவர்களுக்கு அந்த ஊதிய விகிதத்தில் ஆண்டு ஊதிய உயர்வு முறையாக வழங்கப்பட வேண்டும். கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு ஈட்டிய விடுப்பு வருடத்திற்கு 30 நாட்கள் ஒதுக்கீடு செய்யவும், வருடத்திற்கு ஒருமுறை 15 நாட்கள் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து காசாக்கவும், அதிகபட்சமாக 240 நாட்கள் ஈட்டிய விடுப்பு நிலுவை வைக்கவும் அனுமதிக்கலாம்.  கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள ஒவ்வொரு கூட்டுறவு சங்கமும் அறிவுரைகளை கடைப்பிடித்து வருவதை உறுதி செய்து கொள்ளமாறு அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் சரக துணைப்பதிவாளர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் கடந்த 1980ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி முதல் 2001ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி வரை முறையற்ற வகையில் பணிநியனம் செய்யப்பட்டவர்களுள் 2001ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி ஏற்கனவே 27510 பணியாளர்களின் பணிவரன் முறைப்படுத்தப்பட்டு விட்டது. எஞ்சிய 5313 பணியாளர்களுக்கு மட்டும் இதுவரை பணிவரன் முறைப்படுத்தப்படவில்லை என்பதும் மண்டல அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகளில் இருந்து தெரியவந்தது. கூட்டுறவு சங்கங்களில் நாளது தேதி வரை பணிவரன் முறைப்படுத்தப்படாத பணியாளர்களுக்கும் அவர்கள் அடுத்த உயர் பதவிக்குரிய கல்வித்தகுதியை பெற்றிருப்பின் சமநீதி என்ற கோட்பாட்டின்படி கருணை அடிப்படையில் அவர்களுக்கும் பதவி உயர்வு அளிக்க வகை செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவினை செயல்படுத்திட கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர்கள் சிறப்புத் துணைவிதிகளில் சம்பந்தப்பட்ட விதியின் கீழ் ஒரு இடைநிலைத் துணைவிதி ஏற்படுத்திக் கொண்டு அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கும்படி சுற்றறிக்கையில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே இதுவரை இடைநிலைத் துணைவிதி ஏற்படுத்தி பதிவு செய்யாத கூட்டுறவுச் சங்கங்கள் மேலும் காலதாமதமின்றி இடைநிலை துணைவிதியை விரைந்து ஏற்படுத்தி பதிவு செய்து கொள்வதை உறுதி செய்து கொள்ளும்படி அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் சரக துணைபதிவாளர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் கடந்த 2021க்கு முன்னர் ஏற்கனவே தயாரித்து ஒப்புதலளித்து வைத்துள்ள பணிமூப்பு பட்டியலில் உள்ள முறைப்படி பணியமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு அளித்த பின்னர் முறையற்ற வகையில் பணிநியமனம் செய்யப்பட்டு பணிவரன் முறைப்படாதவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க வேண்டும். கூட்டுறவு சங்கத்தில் ஒரு குறிப்பிட்ட பதவியில் முறையற்ற வகையில் பணிநியமனம் செய்யப்பட்டு பணிவரன் முறைப்படுத்தப்படாத பணியாளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இருப்பின், சங்கத்தில் அவர்கள் பணிநியமனம் செய்யப்பட்ட தேதியின் அடிப்படையில் அவர்ளுக்குள் பணிமூப்பு வழங்கப்பட வேண்டும். ஒரே தேதியில் ஒன்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் ஒரேபதவியில் பணிநியமனம் செய்யப்பட்டிருப்பின், அவர்களின் பிறந்த தேதியின் அடிப்படையில் அவர்களுக்குள் பணிமூப்பு வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Improper recruitment to provide benefits to non-reserved workers: Registrar of Co-operative Societies orders
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...