×

ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிக்கான முதல்நிலை தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி: தமிழகத்தில் 13ம் தேதி நுழைவுத் தேர்வு

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிக்கான முதல்நிலை தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சிக்கான நுழைவு தேர்வு தமிழகத்தில் 17 மையங்களில் வரும் 13ம் தேதி நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் தலைமை செயலாளரும், அகில இந்திய குடிமைப்பணி தேர்வுப் பயிற்சி மையத்தின் தலைவருமான இறையன்பு வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தைச் சேர்ந்த இளநிலைப் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகளுக்கு தமிழக அரசின்  சார்பில் சென்னையிலுள்ள அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்திலும், கோயம்புத்தூர், மதுரை மாவட்டங்களில் உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணி பயிற்சி மையங்களிலும் மத்திய தேர்வாணையம்  நடத்தும் குடிமைப்பணி முதல்நிலை தேர்வுக்கு கட்டணமில்லா  பயிற்சி அளிக்கப்பட்டு  வருகிறது.

இந்த பயிற்சிக்கான நுழைவுத்தேர்விற்கு இணையதள வழியாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு, 7077 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 2023 மே 28ம் தேதி நடைபெற உள்ள மத்திய தேர்வாணையம் நடத்தும் முதல்நிலைத் தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி அளிப்பதற்கான நுழைவுத் தேர்வு, தமிழ்நாட்டில் உள்ள 17 மையங்களில் வரும் 13ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.  நுழைவுத் தேர்வுக்கு  விண்ணப்பித்த ஆர்வலர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பயிற்சி மைய இணையதளத்தின் www.civilservicecoaching.com வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தேர்வில் 150 கொள்குறி வினாக்களுக்கு விடை அளிக்கப்பட வேண்டும். தேர்வு 13ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணி முதல் 1 மணி வரை இரண்டரை  மணி நேரம் நடைபெறும்.


Tags : Tamil Nadu , Free Coaching for IAS, IPS Post First Exam: 13th Entrance Exam in Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...