ஆட்சி இல்லாத மாநிலத்தில் ஆளுநரை வைத்து பாஜ ஆட்சி நடத்துகிறது: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

சென்னை: பாஜ ஆட்சி இல்லாத மாநிலத்தில், ஆளுநரை வைத்து ஆட்சி நடத்தி வருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார். நவம்பர் புரட்சி தினத்தையொட்டி, சென்னை, பெரம்பூர் பகுதியில் வடசென்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செஞ்சட்டை பேரணி நடந்தது. நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசியதாவது:  2024 தேர்தலில் பாஜ ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்க மாட்டார்கள். கோவை குண்டுவெடிப்பு விவகாரத்தில் அண்ணாமலை  மற்றும் கவர்னர் மாநில அரசின் மீது பொய்யான குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர்.

மத மோதலை உண்டாக்கும் அரசாக பாஜ செயல்படுகிறது. பாஜ அரசு ஆளுநரை வைத்து போட்டி அரசை உண்டாக்கி வருகிறது.  பாஜ ஆட்சி இல்லாத மாநிலத்தில் ஆளுநரை வைத்து ஆட்சி நடத்தி வருகிறது. கூட்டணியில் இருப்பதால் அனைத்து பிரச்னைகளையும், கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒரே மாதிரியாக கையாள முடியாது. கூட்டணியில், இருந்தாலும், அனைத்தும் தனித்தனி கொள்கை கோட்பாடுடைய தனித்தனி கட்சிகள்தான். நாங்கள் கூறும் சில விஷயங்களை விசிக ஏற்றுக்கொள்ளாது. விசிக கூறும் சிலவற்றை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஆனால், பாஜவை வீழ்த்த வேண்டும் என்பதில் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: