விதிகளை பின்பற்றி அரசு பணி நியமனங்கள்: புதுச்சேரிக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  புதுச்சேரியில் அரசு பணி நியமனங்கள் விதிகளை பின்பற்றி மேற்கொள்ளப்படும் என்று உத்தரவாதம் அளித்து மனுதாக்கல் செய்ய அம்மாநில அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி பொதுப்பணித்துறையில் 10 ஆயிரம் பேரை சட்டவிரோதமாகவும், விதிகளுக்கு முரணாகவும் பணியமர்த்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக  கூறி,  பட்டதாரி இளைஞர் அய்யாசாமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், புதுச்சேரி பொதுப்பணி துறையில்  எத்தனை பேர் சட்ட விரோதமாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரங்களுடன் நேரில் ஆஜராகுமாறு புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை செயலாளருக்கு  உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, புதுச்சேரி பொதுப்பணித்துறை செயலாளர் குமார் நேரில் ஆஜரானார். புதுச்சேரி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 2016ம் ஆண்டு முதல் இதுவரையில் எந்த நியமனங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அரசுப் பணி நியமனங்கள் முழுக்க முழுக்க விதிகளை பின்பற்றியே மேற்கொள்ளப்படும் என்று உறுதி தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, விதிகளை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்று உத்தரவாதம் அளித்து மனுதாக்கல் செய்யுமாறு  புதுச்சேரி அரசுக்கு அறிவுறுத்தி விசாரணையை வரும் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: