கோவை காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம்: தமிழகம் முழுவதும் 45 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை: சென்னை, திருப்பூர் உள்ளிட்ட பகுதியில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது

சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பாக, கைது செய்யப்பட்ட 6 பேருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சொந்தமான கோவை, சென்னை, திருப்பூர் உட்பட தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தேசிய புலானய்வு முகமை நேற்று அதிரடி சோதனை நடத்தியது. கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த மாதம் 23ம் தேதி அதிகாலையில் கார் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டி வந்த உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்த ஜமேஷா முபின்(28) என்ற பொறியியல் பட்டதாரி உடல் கருகி பலியானார். இது குறித்து உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜமேஷா முபினுடன் நேரடி தொடர்பில் இருந்து அவரது நண்பர்களான முகமது அசாரூதின்(23), அப்சர்கான்(28), முகமது தல்கா(25), முகமது ரியாஸ்(27), பெரோஸ் இஸ்மாயில்(26), முகமது நவாஸ் இஸ்மாயில்(27) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

அதில் உயிரிழந்த ஜமேஷா முபின் தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து, இந்த வழக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தேசிய புலானய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. அதைதொடர்ந்து, இந்த கார் வெடிப்பு குறித்து தேசிய புலனாய்வு முகமை, தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த  6 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவை அடுத்து  அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் அதாவது வரும் 22ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைதொடர்ந்து,  அந்த 6 பேரையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை டிஐஜி வந்தனா, எஸ்பி ஸ்ரீஜித், விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் விக்னேஷ் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இந்த வழக்கை விசாரித்த கோவை மாநகர தனிப்படை போலீசார் 14 பேர் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு உதவியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்யப்பட்ட 6 பேரிடம் நடத்திய விசாரணையின் போது, அவர்கள் வழக்கு தொடர்பாக பல தகவல்கள் அளித்ததாக கூறப்படுகிறது. அதில் உயிரிழந்த ஜமேஷா முபின் உடன் தமிழகத்தில் பலர் நேரடியாக தொடர்பில் இருந்து வந்ததும், இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட இயக்கங்களுடன் நேரடி தொடர்பில் இருந்ததற்கான ஆவணங்களும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் சிக்கியது. மேலும், கைது செய்யப்பட்டுள்ள 6 பேரும் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் நேரடி தொடர்பில் இருந்ததும் விசாரணையில் உறுதியானது. அதைதொடர்ந்து சோதனையில் கிடைத்த ஆவணங்கள் மற்றும் கைது செய்யப்பட்ட 6 பேர் அளித்த தகவலின் படி கேரள மாநிலம் கொச்சி மற்றும் சென்னையில் இருந்து வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கோவை மாநகர காவல்துறையுடன் இணைந்து நேற்று காலை 4 மணி முதல் கோவை உக்கடம், ஜிஎம் நகர், கோட்டைமேடு, குனியமுத்தூர், கரும்புக்கடை, செல்வபுரம் உள்ளிட்ட 33 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

சோதனையின் போது எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் தடுக்கும் வகையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவுப்படி துணை கமிஷனர் மதிவாணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்தியா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல், சென்னை, சீர்காழி, திருப்பூர், நெல்லை, மதுரை, காயல்பட்டினம் ஆகிய பகுதிகளிலும் சோதனை நடந்தது. சென்னையை பொறுத்தவரை புளியந்தோப்பு தாசாமகான் பகுதியை சேர்ந்த சலாவுதீன் என்பவருக்கு செந்தமான வீடு, வியாசர்பாடி புது நகர் பகுதியை சேர்ந்த ஜாபர் சாதிக் வீடு, புதுப்பேட்டை திருவேங்கடம் தெருவை சேர்ந்த நிஜாமுதீன் வீடு, மண்ணடி பகுதியில் ராஜா முகமது மற்றும் அவரது சகோதரர் சிக்கந்தர் வீடு என 5 இடங்களில் ேநற்று அதிகாலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையானது கோவையில் 33 இடங்களிலும், சென்னையில் 5 இடங்களிலும், மதுரையில் 2 இடத்திலும், திருப்பூரில் ஒரு இடத்திலும், சீர்காழியில் ஒரு இடத்திலும்,  காயல்பட்டினத்தில் ஒரு இடத்திலும் என மொத்தம் தமிழகம் முழுவதும் 45 இடங்களில் நேற்று நடந்தது. சில இடங்களில் நண்பகலில் சோதனை முடிந்தது. அதேநேரம் கோவை உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு வரை இந்த சோதனை நடந்தது. சோதனை முடிவில் 45 இடங்களில் இருந்தும் செல்போன்கள், லேப்டாப், கணினிகள், முக்கிய கோப்புகள், வங்கி கணக்கு புத்தகங்கள், பென்டிரைவ், டிஜிட்டல் ஆவணங்கள், தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததற்கான மின்னணு ஆவணங்கள் உள்பட பலவற்றை பறிமுதல் செய்ததாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.கார் வெடிப்பு வழக்கு என்பதால் 45 இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனை குறித்த ரகசியங்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

Related Stories: