சேத்துப்பட்டிலிருந்து புதுச்சேரி, ஆற்காடுக்கு பஸ்கள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டில் இருந்து புதுச்சேரி, திண்டிவனம், ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தின் மத்திய பகுதியில் உள்ளது சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சி.  தாலுகா அந்தஸ்து பெற்ற இந்த பேரூராட்சி பகுதியில்  ஏராளமான குடும்பத்தினர் வசிக்கின்றனர். இதை சுற்றிலும் பல்வேறு கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் பொருட்களை வாங்கவும், வெளியூர் செல்லவும் சேத்துப்பட்டு வருகின்றனர். இதுதவிர பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் சேத்துப்பட்டுக்கு வந்து அங்கிருந்து பல்வேறு பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு செல்கின்றனர். இதேபோல் நோயாளிகளும் வெளிமாவட்டங்களில் உள்ள மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர். பெரும்பாலான மக்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்ல விரும்புகின்றனர்.

ஆனால் சேத்துப்பட்டில் இருந்து நேரடியாக புதுச்சேரிக்கு பஸ் போக்குவரத்து இல்லை. இதனால் மற்ற பகுதிக்கு சென்று அங்கிருந்து புதுச்சேரிக்கு செல்லும் நிலை உள்ளது. இதேபோல் திண்டிவனம், ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவும் பஸ் வசதி இல்லை. சேத்துப்பட்டில் அரசு போக்குவரத்து பணிமனை உள்ளது. ஆனால் பிரதான நகரங்களுக்கு செல்ல ேநரடி பஸ்கள் கிடையாது.  பல ஆண்டுகளாக இந்த நிலை நீடிக்கிறது. இதுதொடர்பாக அவ்வப்போது பொதுமக்கள் சார்பில் அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. எனவே சேத்துப்பட்டில் இருந்து நேரடியாக புதுச்சேரி, திண்டிவனம் மற்றும் ஆற்காடு பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து ஏற்பாடு செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: