×

போடியில் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

போடி: தேனி மாவட்டம், போடியில் கடந்த 1901ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் கட்டப்பட்டு காமராஜர் சாலையில் இயங்கி வருகிறது. இங்கு பதிவாளர் உட்பட 7 பேர் பணியில் உள்ளனர். போடியைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் நிலம், வீடு வாங்க, விற்க இந்த அலுவலகத்திற்கு வருகின்றனர். இந்தக் கட்டிடம் 121 ஆண்டுகள் கடந்தும், இன்னும் கம்பீரமாக நிற்கிறது. ஆனால் கட்டிட மேற்கூறையில் விழுந்துள்ள விரிசல் காரணமாக மழை காலங்களில் தண்ணீர் ஒழுகுகிறது. இதனால் அலுவலகத்தில் உள்ள முக்கியமான ஆவணங்கள் தண்ணீரில் நனையும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

மேலும் வளாகத்திற்குள் கழிப்பிட வசதி சரிவர இல்லாததால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இந்த அலுவலகத்தின் கட்டிட சுவர்கள் அனைத்தும் கருங்கற்களால் கட்டப்பட்டு உறுதியாக இருந்தாலும், மேற்கூரை முழுவதும் பழுதாகி இருப்பதால், அங்கு வேலை பார்க்கும் அரசு ஊழியர்கள் ஒருவித அச்சுத்துடனே இருந்து வருகின்றனர். எனவே பழைய அலுவலக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய அலுவலகம் நவீன முறையில் கட்ட வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Deeds Office ,Bodi , New building for Deeds Office in Bodi: Public insistence
× RELATED காட்டுமாடு முட்டி விவசாயி படுகாயம்