×

மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக திகழும் திருமயம் காட்டுபாவா பள்ளிவாசலில் சந்தனக்கூடு ஊர்வலம் கோலாகலம்: திரளானோர் பங்கேற்பு

திருமயம்: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள காட்டுபாவா பள்ளிவாசல் கடந்த 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய மூன்றாவது தர்காவாகும். இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு 356வது சந்தனக்கூடு விழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 15 நாட்கள் சிறப்பு துவா தினமும் நடைபெற்றது. திருவிழாவின் நிறைவு நாளான நேற்றிரவு சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி பள்ளிவாசலில் இருந்து போர்வை பெட்டி நல்லூர் கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு இந்துக்கள் போர்வை பெட்டிக்கு வரவேற்பு அளித்து சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடத்தி இஸ்லாமியர்களுக்கு விருந்து வைத்தனர். இந்த சம்பிரதாயம் கடந்த 356 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சம்பிரதாய நிகழ்ச்சிகள் நடைபெற்ற பின்னர் போர்வையை தர்காவிற்கு எடுத்து வந்த இஸ்லாமியர்கள் பாவா அடக்கஸ்தலத்தில் போர்த்திய பின்னர் மின்னொளிகளால் அலங்கரிப்பட்ட சந்தனக்கூடு வாணவேடிக்கைகளுடன் தர்காவை வலம் வந்தது. சந்தனக்கூடுவுக்கு முன்னர் வரும் கள்ளந்தேரை சம்பிரதாயபடி இந்துக்கள் இழுத்து வந்தனர்.

தொடர்ந்து சந்தனக்கூடு தர்காவை வலம் வந்தது. பின்னர் பாவாவுக்கு சந்தனம் பூசப்பட்டு சந்தனக்கூடு விழா நிறைவடைந்தது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும்  அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சந்தனக்கூடு விழாவையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இதையொட்டி ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Tags : Tirumayam Kattupava Church , Sandalwood Procession at Tirumayam Kattupava Church, an Example of Religious Harmony: Large Participation
× RELATED மே மாதத்தின் முதல் 2 வாரங்களில் ஈரோடு,...