திருவாரூர், பெரம்பலூரில் மூளைச்சாவு அடைந்த வாலிபர், தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்: பல பேருக்கு மறுவாழ்வு

திருவாரூர்: மயிலாடுதுறையை சேர்ந்தவர் ஐயப்பன்(35). இவரது மனைவி வாசுகி, மகன்கள் மாதேஷ்(9), தினேஷ்(5). ஐயப்பன், கடந்த 2 தினங்களுக்கு முன்னர் சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று காலை மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து ஐயப்பனின் குடும்பத்தினர், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இதையடுத்து அவரது இருதயம், நுரையீரல் ஆகியவை எடுக்கப்பட்டு, சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதுபோல் திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவமனை, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு தலா 1 சிறுநீரகம், மதுரை வேலம்மாள் மருத்துவமனைக்கு கல்லீரல் தானமாக எடுத்துச் செல்லப்பட்டன.

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இரண்டு கண்கள் தானமாக வழங்கப்பட்டன. முதல் முறையாக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலிருந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் அகற்றப்பட்டு தானமாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. மற்றொரு சம்பவம்: பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தை சேர்ந்த 52 வயது கூலித் தொழிலாளி விபத்தில் படுகாயம் அடைந்து மூளைச்சாவு ஏற்பட்டது. குடும்பத்தினரின் சம்மதப்படி இவரது, 2 சிறுநீரகங்கள் மற்றும் இருதயம் அதே மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் மூலம் எடுக்கப்பட்டது.

இதில் ஒரு சிறுநீரகம், அதே மருத்துவமனையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவருக்கு பொருத்தப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் சிறப்பு ஆம்புலன்சு மூலம் கொண்டு செல்லப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை நோயாளிக்கும், இருதயம் ஆம்புலன்சு மூலம் கொண்டு செல்லப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை நோயாளிக்கும் பொருத்தப்பட்டது. வாலிபர், தொழிலாளியின் உடல் உறுப்பு தானத்தால் பல பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

Related Stories: