மூலகுளம்-பெரம்பை ரோட்டில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்: வியாபாரிகள் வாக்குவாதம்- பரபரப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் வாகன நெரிசல் ஆங்காங்கே ஏற்படுவதாகவும், விபத்துகளால் உயிரிழப்புகள் நடப்பதாகவும் புகார் எழுந்தன. இதனிடையே உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி புதுச்சேரியில முக்கிய சாலைகளில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்புகளை பொதுப்பணி தேசிய நெடுஞ்சாலைத் துறையினர், நகராட்சியினர் ஆங்காங்கே அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக புதுச்சேரி மூலகுளம் எம்ஜிஆர் சிலை சந்திப்பில் இருந்து பெரம்பை ரோடு பகுதிகளில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டனர்.

செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி பொறியாளர் ராஜன், இளநிலை பொறியாளர் ரமேஷ்குமார் ஆகியோர் தலைமையில் ஒரு பொக்லைன் இயந்திரம், 2 டிராக்டர் மற்றும் வெல்டர் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அங்கிருந்த சாலையோர பூக்கடைகள், கறிக்கடை, பெட்டிக் கடைகளின் கொட்டகைகளை சிறு வியாபாரிகள் ஏற்கனவே கடந்த வாரம் விடுத்த முன்னெச்சரிக்கையால் பிரித்துவிட்ட நிலையில், மீதமுள்ளவற்றை பொக்லைன் இயந்திரம் மூலம் அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர்.

மேலும் சாலையோரத்தில் இருந்த வியாபார ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன. அப்போது கால அவகாசம் கேட்டு வியாபாரிகள் சிலர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர், எஸ்ஐ ஜாகீர் உசேன் தலைமையிலான போலீசார், வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியபிறகு தொடர்ந்து அங்குள்ள தியேட்டர் வரையிலான பகுதிகளை கடந்து சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் இடிக்கப்பட்டன.

Related Stories: