கூடங்குளம் அணுஉலையில் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆய்வறிக்கை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு

புதுடெல்லி: கூடங்குளம் அணு உலை விவகாரத்தில், இதுவரை மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இன்னும் 2 வாரத்தில் ஒன்றிய அரசு ஆய்வறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டார். கூடங்குளம் அணுஉலை தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் சுந்தர்ராஜன் ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், கூடங்குளம் அணு உலையில் அணுக்கழிவுகள் சரியாக கையாளப்படாமலும், உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமலும் இருந்து வருகிறது. மேலும், அணுக்கழிவுகளை பாதுகாப்பாக அகற்றாமல், கடலில் கொட்டப்பட்டு வருகிறது. அதனால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். எனவே, கூடங்குளம் அணு உலையில் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றும்வரை, அணு உலையில் மின் உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், மேற்கண்ட வழக்கு இன்று காலை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதத்தில், கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் உள்ளிட்ட எதையும் தமிழக அரசு செய்யாமல் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், கூடங்குளம் அணு உலை விவகாரத்தை பொறுத்தமட்டில், கையொப்பமான ஒப்பந்தம் ஒன்று. ஆனால், தற்போது செயல்படும் நடைமுறைகள் முற்றிலும் வேறுபாடாக உள்ளது. அணு உலை போன்றவற்றை கையாள, நீதிமன்றங்கள் முன்னதாக கொடுத்த உத்தரவுகள் ஏதும் இவ்விவகாரத்தில் பின்பற்றப்படவில்லை. இந்த அணு உலையால் ரஷ்யாவின் செர்னோபில், ஜப்பானின் புகுசிமா ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலை கூடங்குளத்திலும் ஏற்படும்.

அவ்வாறு ஏற்படும் பட்சத்தில், அது தென்னிந்தியாவையே பாதிக்கும். ஆகவே, இவ்விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்டபிறகு தலைமை நீதிபதி சந்திரசூட் பிறப்பித்த உத்தரவில், கூடங்குளம் அணுஉலை விவகாரம் என்பது சீரியஸான விஷயமாகும். இதில் நீதிமன்றம் மட்டுமின்றி, பொதுமக்களும் திருப்தியடையும் வகையில் ஒன்றிய அரசு ஏதாவது செய்ய வேண்டும் என குறிப்பிட்டார். இவ்வழக்கில் விசாரிக்க வேண்டிய அம்சங்கள், செய்யப்பட்டு இருக்கும் நடவடிக்கைகள், தற்போது வரை எடுக்கப்பட்டு உள்ள முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பட்டியலிட்டு, உச்சநீதிமன்றத்தில் அறிக்கையாக வழங்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் ஒத்திவைத்தார்.

Related Stories: