டி20 உலகக்கோப்பை 2-வது அரையிறுதி போட்டி: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி படுதோல்வி

அடிலெய்டு: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. அடிலெய்டில் நடைபெற்ற போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் கேஎல் ராகுல் களமிறங்கினர். சமீப காலமாக சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாத கேஎல் ராகுல் இந்த போட்டியிலும் 5 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து வெளியேறினார். கேப்டன் ரோஹித் ஷர்மா 28 பந்துகளில் 27  ரன்கள் எடுத்து வழக்கம் போல பெவிலியனுக்கு நடையை கட்டினார்.

மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய விராட் கோலி தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் 14 ரன்களில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய பாண்டியா கோலியுடன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி 50 ரன்கள் அடித்த நிலையில் 18-வது ஓவரில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய பண்ட் வந்த வேகத்திலேயே வெளியேறினார். இறுதி நிலையில் அதிரடிக்காட்டிய  பாண்டியா 33 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு ஆறுதல் அளித்தார்.

இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் மிகவும் எளிதாக இலக்கை எட்டி உலகக்கோப்பையில் இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மூலம் இந்திய அணியின் பந்துவீச்சு பெரும்  விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மேலும் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி குறித்தும், பேட்டிங் ஃபார்ம் குறித்தும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கிளம்பியுள்ளது.

Related Stories: