×

நூதன முறையில் மோசடி சென்னை காதல் ஜோடி சிக்கியது

சேலம்: சேலம் வின்சென்ட் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (40). இவர் பிரவுசிங் சென்டர் வைத்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு இளம்ஜோடி அங்கு வந்து, எங்களது நண்பரின் அக்கவுண்டுக்கு ரூ.20 ஆயிரம் அனுப்புங்கள். நான் உங்களுக்கு எனது அக்கவுண்டில் இருந்து பேடிஎம் மூலம் அனுப்புகிறேன் என்று வாலிபர் கூறியுள்ளார். நாகராஜன் பணத்தை ஆன்லைன் மூலமாக அவர் கொடுத்த அக்கவுண்ட் நம்பருக்கு அனுப்பி வைத்தார். உடனே அந்த வாலிபர் தனது செல்போன் மூலம் பேடிஎம் மூலமாக ஸ்கேன் செய்து நாகராஜனுக்கு அனுப்பியுள்ளார். மேலும் நாகராஜனுக்கு அனுப்பியதற்கான ஸ்க்ரீன் ஷாட்டையும் அனுப்பியுள்ளார். பின்னர் அங்கிருந்து அந்த ஜோடி தப்பி மாயமாகிவிட்டது. வெகுநேரமாகியும் அக்கவுண்ட்டில் பணம் வந்ததற்கான மெசேஜ் எதுவும் வராததால் சந்தேகம் கொண்டு ஸ்கிரீன் ஷாட்டை பார்த்தபோது அது போலியாக தயாரித்தது தெரியவந்தது.

இதுகுறித்து அந்த வாலிபரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் சரியான பதில் அளிக்கவில்லை. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் நாகராஜன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மோசடி செய்த நபரின் செல்போன் எண் மூலமாக நடத்திய விசாரணையில் நேற்று சேலம் சீலநாயக்கன்பட்டியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சீலநாயக்கனபட்டியில் வைத்து பண மோசடி நபரையும் அவருடன் இருந்த இளம்பெண்ணையும் பிடித்தனர். பின்னர் சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரித்தனர். இதில், அவ்வாலிபர் எட்வின் தாமஸ் (21), சென்னை பூந்தமல்லியை சேர்ந்த அரசு பஸ் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்ற டிரைவர் ஜோசப் ஜெயப்பிரகாஷ் என்பவரது மகன் என்பதும், அவருடன் இருந்த பெண் ஆந்திராவை சேர்ந்த செரீல் ஏஞ்சல் (19) என்பதும் தெரியவந்தது.

காதலர்களான இவர்கள் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டதாக போலீசாரிடம் தெரிவித்தனர். சென்னையில் உள்ள ஓட்டல் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தில் சேர்ந்து படித்துள்ளனர். அப்போது காதல் ஏற்பட்டு படிப்பை பாதியில் விட்டுவிட்டு ஜாலியாக ஊர் சுற்றிவந்துள்ளனர். மேலும் இதுபோன்று கடன் தருவதாக கூறும் நபர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு, மோசடியில் ஈடுபட்டு ஊர் சுற்றி ஜாலியாக வந்துள்ளனர். போதை பழக்கத்திற்கு அடிமையான எட்வின், மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுள்ளார். வாலிபர் எட்வின் தாமஸ், மீது சென்னையில் மட்டும் 5 மோசடி வழக்குகள் இருக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் இதுபோன்று மோசடி செய்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Chennai , A Chennai romantic couple caught in a scam
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...