×

இந்தியாவை எதிர்கொள்ள ஆசை: பாக். துணை கேப்டன் சதாப்கான் பேட்டி

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8வது ஐசிசி டி.20 உலக கோப்பை தொடரில் சிட்னியில் நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான், 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி பைனலுக்கு தகுதி பெற்றது. 13 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் இறுதிபோட்டிக்குள் நுழைந்துள்ளது.இந்த வெற்றியை அந்த அணி வீரர்கள் மட்டுமின்றி அந்நாட்டு ரசிகர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர். நேற்று வெற்றிக்கு பின் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அளித்த பேட்டி: கடந்த 3 போட்டிகளில் அணி சிறந்த வழியில் செயல்பட்டது. மைதானத்திற்கு வந்து எங்களை உற்சாகப்படுத்தும் கூட்டத்திற்கு நன்றி. இதனால் நாங்கள் சொந்த நாட்டில் விளையாடுவது போல் உள்ளது. முதல் 6 ஓவர்களில் நல்ல துவக்கத்தைப் பெற்றோம்.

எங்களிடம் நல்ல சுழல் தாக்குதல் இருந்தது. வேகப்பந்துவீச்சாளர்களும் தங்களின் வேலையை சரியாக செய்து முடித்தார்கள். நாங்கள் பேட்டிங் செய்வதற்கு உள்ளே செல்வதற்கு முன் முதல் 6 ஓவர்களை பயன்படுத்துவதாக திட்டம் வைத்திருந்தோம். முகமது ஹாரிஸ் ஒரு இளைஞர் அவரது ஆட்டத்தில் ஆக்ரோஷத்தை காட்டுகிறார். இந்த வெற்றியை இந்த தருணத்தை நாங்கள் அனுபவிப்போம் ஆனால் எங்கள் கவனம் இறுதிப் போட்டியில் இருக்கும், என்றார். ஆட்டநாயகன் விருது பெற்ற முகமது ரிஸ்வான் கூறுகையில், நானும் பாபரும் நல்ல முறையில் பவர் பிளேவை முடித்தோம். நாங்கள் எங்களுக்குள் யாராவது ஒருவர் நிலைத்து நின்று ஆட்டத்தை முடிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.

எங்கள் அணி வீரர்கள் கடுமையாக உழைக்கிறார்கள். நாங்கள் எப்பொழுதும் நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறோம், என்றார். துணை கேப்டன் சதாப் கான் கூறியதாவது: இறுதி போட்டியில் விளையாட ஆவலாக காத்திருக்கிறேன். என்னை பொறுத்தவரை இறுதி போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ள விரும்புகிறேன். எப்பொழுதுமே இந்தியா, பாகிஸ்தான் போட்டி என்றால் எந்த அளவு பரபரப்பு இருக்கும் என்பது நாம் அறிந்ததே. எனவே அந்த வகையில் நான் இந்திய அணிக்கு எதிராகவே விளையாட விருப்பப்படுகிறோம், என்றார்.

Tags : India ,Pak ,Shatab Khan , Desiring to face India: Pak Vice Captain Shatab Khan interview
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...