`பார்ப்பதற்கு பிரமிப்பாக இருக்கும்’ இறுதிபோட்டியில் இந்தியாவுடன் மோதவே விருப்பம்: பாகிஸ்தான் பயிற்சியாளர் ஹைடன் ஆசை

டி20 உலக கோப்பை முதல் அரை இறுதியில் நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. போட்டிக்கு பின் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மேத்யூ ஹைடன் கூறியதாவது:- இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் அரை இறுதிபோட்டியில் இந்தியா வெற்றிபெறவே நான் விரும்புகிறேன். அதன் பிறகு மெல்போர்னில் திருவிழா போல் இறுதி போட்டி நடைபெறும். இறுதி போட்டியில் நாங்கள் இந்தியாவை சந்திக்கவே விரும்புகிறோம். ஏனென்றால் மக்கள் தொகையில் ஒரு பகுதி அந்த ஆட்டத்தை காண மைதானத்திற்கு வந்துவிடுவார்கள். அதை பார்ப்பதற்கு பிரமிப்பாக இருக்கும். அதைப்பற்றி நினைத்தாலே அற்புதமாக இருக்கிறது. ஆனால் இன்று (நேற்று) இரவையும் என்னால் மறக்க முடியாது.

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நம்ப முடியாத அளவிற்கு அவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். இன்னும் பாகிஸ்தான் அணி அவர்களுடைய முழு திறமையை வெளிப்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. எங்களை இறுதிப் போட்டியில் யார் எதிர்கொள்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் பயம் காத்திருக்கிறது. மெல்போர்ன் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என நம்புகிறேன். ஆடுகளத்தில் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும் என நினைக்கிறேன். பாபர் மற்றும் ரிஸ்வான் பாகிஸ்தானுக்கு பல வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

முகமது ஹாரிஸ் பயிற்சியிலேயே அனைத்து பந்துவீச்சாளர்களையும் சிதறடித்து வருகிறார். ஹரிஷ் ராவுப் தொடர்ந்து 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு குறையாமல் பந்துவீசி வருகிறார். பாகிஸ்தான், அன்றைய நாளில் சிறப்பாக விளையாடினால் அவர்களை தடுத்து நிறுத்தவே முடியாது. சதாப் கான் எங்கள் அணியின் சிறந்த போராளியாக விளங்குகிறார். பைனலில் இந்தியாவுடன் பாகிஸ்தான் மோதவேண்டும் என்று நான் மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: