×

உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை பட்டியலிட புதிய நடைமுறை: தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவு

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் புதிய வழக்குகளை குறிப்பிட்ட கிழமைகளில் பட்டியலிடும் புதிய நடைமுறையை செயல்படுத்தும்படி இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவு பிறப்பித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் ரிட், மேல்முறையீடு, இடையீட்டு மனு மற்றும் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. இவை அனைத்தையும் உச்சநீதிமன்ற பதிவாளர் முதலில் பரிசீலிப்பார். இதைத் தொடர்ந்து, அம்மனுவில் பிழை ஏதும் இல்லாத பட்சத்தில், தலைமை நீதிபதியின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். பின்னர் அந்த மனுக்களை பரிசீலிக்கும் தலைமை நீதிபதி, அம்மனுக்களை உரிய அமர்வில் பட்டியலிடுமாறு உச்சநீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவு பிறப்பிப்பார்.

இதுபோன்ற நடைமுறைகள் காலதாமதமாகும் பட்சத்தில், தங்களது மனுவை அவசரமாக எடுத்து விசாரிக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள், தலைமை நீதிபதி அமர்வில் கோரிக்கை விடுப்பது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில், இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், உச்சநீதிமன்றத்தில் திங்கள், செவ்வாய், சனிக்கிழமைகளில் பதிவு செய்யப்படும் அனைத்து வழக்குகளும், அடுத்த திங்கட்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்படும்.

அதேபோல் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பதிவு செய்யப்படும் வழக்குகள் அனைத்தும் மறுவாரம் வெள்ளிக்கிழமை தானாகவே பட்டியலில் இடம்பெறும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்ற பதிவாளருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தலைமை நீதிபதி சந்திரசூட் குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய நடைமுறை அறிவிப்பு, வழக்குகள் அனைத்தும் தாமதமின்றி பட்டியலிடப்படுவதை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Supreme Court ,Chief Justice ,Chandrachud , New procedure for listing cases in Supreme Court: Chief Justice Chandrachud orders
× RELATED உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாஜி...