×

தைவானுக்கு எதிராக போர் தொடுக்கிறதா சீனா?.. சீ சின்பிங் உத்தரவால் பதற்றம்..!

பெய்ஜிங்: எந்த மாதிரியான போரையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என அந்நாட்டு ராணுவத்துக்கு சீ சின்பிங் உத்தரவிட்டுள்ளார். சீனாவில் மன்னர் ஆட்சிக்கு பின் ஆட்சியை பிடித்த தேசியவாத கட்சி படைகளுக்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செம்படைக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்றது. இதில் செம்படை வெற்றி பெற்ற நிலையில் அதன் தலைவரான மா சே துங் ஆட்சியை கைப்பற்றினார். தோல்வியடைந்த கோமின்டாங் என அழைக்கப்பட்ட தேசியவாத கட்சியினர் தென் சீன கடலில் தைவானுக்கு குடி பெயர்ந்தனர்.

அங்கிருந்து ஆட்சி அமைத்த கட்சியினர் தங்களை சுதந்திர நாடாகவும் அறிவித்தனர். இதனை ஏற்காத சீனா தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்றும் மற்ற நாடுகளும் தைவானை அங்கீகரிக்கக்கூடாது என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் தைவானை தனி இறையாண்மை கொண்ட நாடாக 13 நாடுகள் அங்கீகரித்துள்ளன. மேலும் தைவானுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தைவானை ஆக்கிரமிக்க சீனா முயன்றால் அந்நாட்டிற்கு எதிராக போர் தொடுப்போம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதுமட்டுமின்றி சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த ஆகஸ்ட் மாதம் தைவானுக்கு வருகை தந்தார். அந்த நேரத்தில் தைவான் அருகே சீன கடற்படை போர் பயிற்சியில் ஈடுபட்டதால் போர் பதற்றம் ஏற்பட்டு பின்னர் தணிந்தது. இந்த சூழலில் ராணுவ பயிற்சியை வலுப்படுத்தவும் எத்தகைய போருக்கும் ராணுவம் தயாராக இருக்கவும் அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டதாக சீனாவின் அரசு தொலைக் காட்சி தெரிவித்துள்ளது. தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள கூட்டு ராணுவ தலைமையகத்தில் அமைந்துள்ள மத்திய ராணுவ ஆணையகத்தை நேரில் பார்வையிட்ட அவர் சீனர்கள் முன் உள்ள பல்வேறு சவால்களையும் முறியடிக்க ராணுவம் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் புரிவதற்கும் வெற்றியை உறுதி செய்வதற்கும் ஏற்ற வகையில் ராணுவம் தனது ஒட்டுமொத்த சக்தியையும் திரட்டி தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அதிபர் ராணுவத்தினரிடையே உரையாற்றினார். இதன் மூலம் தைவான் பிரச்சனைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க சீனா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்த நிலையில் சீனா தைவான் போர் மூண்டால் பொருளாதாரம் பெரும் சரிவை சந்திக்கும் அபாயம் உள்ளதாக உலக நாடுகள் கவலையும் ஆழ்ந்துள்ளன.


Tags : China ,Taiwan ,Xi Jinping , Is China starting a war against Taiwan?.. Xi Jinping's order is tense..!
× RELATED தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்;...