×

காங்கியனூர் - சுத்தமலை இடையே உள்ள தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்துதர வேண்டும்: 7 கிராம ஊராட்சி மக்கள் கோரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 53 கிராம ஊராட்சிகள் இருந்தன. இந்த நிலையில் நிர்வாக வசதிக்காக விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக 2019ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி தமிழக அரசு அறிவித்தது. அப்போது விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஒன்றியத்தில் இருந்த 7 கிராம ஊராட்சிகளை கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் இணைத்து மொத்தம் 60 கிராம ஊராட்சிகளைக் கொண்ட ஊராட்சி ஒன்றியமாக செயல்பட்டு வருகிறது.

ரிஷிவந்தியம் ஒன்றியத்தின் மையப் பகுதியான பகண்டை கூட்டுச் சாலையில் ரிஷிவந்தியம் சட்டமன்ற அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் ஊட்டச்சத்து அலுவலகம், தனியார் மற்றும் அரசு வங்கிகள், காவல் நிலையம், வட்டார வேளாண்மை விரிவாக்க மையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம, கரும்பு அலுவலகம் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் பல இயங்கி வருகின்றன. அதனால், ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் உள்ள 60 கிராம ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் அன்றாடம் பகண்டை கூட்டு சாலைக்கு வந்து தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு செல்கின்றனர்.

மேலும், தற்போது வாணாபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு தனி தாலுகா தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதுவும் மிக விரைவில் செயல்பட உள்ளது. இந்த நிலையில், காங்கியனூர், மேலந்தல், ஜம்பை, அத்தியந்தல், சித்தப்பட்டினம், தேவரடியார் குப்பம், முருக்கம்பாடி ஆகிய  கிராம ஊராட்சிகள் உள்ளிட்ட பல்வேறு குக்கிராமங்களும் உள்ளன. அந்த கிராமத்தில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 22 ஆயிரத்து 187 நபர்கள் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது கணக்கெடுப்பு முடித்து 11 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால், இந்த மக்கள் தொகையானது இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

அந்த கிராமத்தில் உள்ள பொதுமக்கள் தங்களுடைய அரசு சார்ந்த பணிகள், அரசு குடியிருப்பு திட்டத்தில் சிமெண்ட் மற்றும் கம்பி அதற்கான தொகை பெற மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் பெயர்கள் இணைத்தல் மற்றும் திருத்தங்கள் செய்ய, கிராமத்தில் உள்ள அடிப்படை வசதிகளை அதிகாரிகளிடம் முறையிடவும், அதேபோல் வேளாண்மை துறையில் விவசாயிகளுக்கு தேவையான இடு பொருட்கள், உரங்கள் மற்றும் மருந்துகள், நெல், உளுந்து தானிய விதைகள் வாங்கிச் செல்லவும், அதேபோல் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வட்டார கல்வி அலுவலகம் வந்து செல்ல, சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்ட அரசு சார்ந்த பணிகளை பூர்த்தி செய்ய பகண்டை கூட்டு சாலைக்கு தான் வர வேண்டும்.

அந்த 7 கிராம ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் மணலூர்பேட்டையில் இருந்து மாடாம்பூண்டி கூட்டுச் சாலை வழியாக பகண்டை கூட்டு சாலைக்கு சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் சென்று வர வேண்டும். அல்லது மூங்கில்துறைப்பட்டில் இருந்து கொளத்தூர் வழியாக பகண்டை கூட்டு சாலைக்கு சுமார் 35 கிலோ மீட்டர் தூரம் செல்லக்கூடிய சூழல் உள்ளது. அப்படி வருகின்றபோது நீண்ட தூர பயணம், நேரம் மற்றும் செலவினங்கள் அதிகம் ஆகிறது. அதேபோல் இந்த பகுதிகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே போக்குவரத்து வசதிகள் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர்.

அந்த 7 கிராம ஊராட்சிகளுக்கு இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே இருப்பதால் அப்பகுதி மக்கள் நேரடியாக பகண்டை கூட்டு சாலைக்கு சென்று வர முடியாத சூழல் உள்ளது.
இதனை போக்கும் வகையில் காங்கியனூர்-சுத்தமலை இடையே உள்ள தென்பெண்ணை ஆற்றில் பொதுமக்களின் நலன் கருதி மேம்பாலமோ அல்லது தரைப்பாலமோ அமைத்தால் நேரடியாக பகண்டை கூட்டு சாலைக்கு குறைந்த நேரத்தில் வந்து செல்ல முடியும்.

மேலும், பகண்டை கூட்டு சாலை, அதனை சுற்றியுள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் திருவண்ணாமலை, திருப்பதி உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு குறுகிய நேரத்திலும் சென்று வர முடியும். எனவே காங்கியனூர் - சுத்தமலை இடையே உள்ள தென்பெண்ணை ஆற்றில் மேம்பாலம் அல்லது தரைப்பாலம் அமைத்து தர வேண்டுமென அப்பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நடவடிக்கை எடுக்க எம்எல்ஏ உறுதி
இதுகுறித்து ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ கூறியதாவது: ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட அந்த 7 கிராம ஊராட்சி மக்களின் மிக முக்கிய கோரிக்கையான காங்கியனூர்- சுத்தமலை இடையில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பது மற்றும் போக்குவரத்து வசதி குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துறை சார்ந்த அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை மிக விரைவாக தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

ஒரு பணியை செய்ய 3 நாட்கள் ஆகிறது
இதுகுறித்து சமூக ஆர்வலர் மேலந்தல் ராஜி கூறியதாவது: எங்கள் கிராமத்தைச் சுற்றியுள்ள பொதுமக்கள் பல்வேறு அலுவலகம் சார்ந்த பணிகளை மேற்கொள்ள பகண்டை கூட்டு சாலைக்கு செல்ல வேண்டும். அதற்கு போதிய பேருந்து வசதி இல்லை. ஒரு சில பேருந்தில் பயணம் செய்ய மேலந்தலில் இருந்து மணலூர்பேட்டை, மாடாம்பூண்டி கூட்டு சாலை மற்றும் பகண்டை கூட்டு சாலை என 3 பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டும்.

ஒரு பணியை செய்ய இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகிறது. ஒரு சில நேரங்களில் அதிகாரிகள் இல்லாவிட்டால் விரக்தியுடன் வீடு திரும்ப வர வேண்டிய சூழல் உள்ளது.
ஆகவே காங்கியனூர்-சுத்தமலை இடையே தரைப்பாலம் அல்லது மேம்பாலம் அமைத்துக் கொடுத்தால் மக்கள் குறைந்த நேரத்தில் நேரடியாக வந்து செல்வதற்கு ஏதுவாக இருக்கும். என்றார்.

போதுமான பேருந்துகள் இயக்க வேண்டும்
சமூக ஆர்வலர் காங்கியனூர் மாசிலாமணி கூறியதாவது: காங்கியனூர்-சுத்தமலை இடையே பாலம் அமைத்துக் கொடுத்தால் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் அப்பகுதியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகண்டை கூட்டு சாலைக்கு மிக விரைவாக சென்று அரசு சார்ந்த பணிகளை மேற்கொள்ளவும், சிரமம் இன்றி வந்து செல்வதற்கு ஏதுவாக இருக்கும்.

அதேபோல் எங்கள் கிராமத்தைச் சுற்றியுள்ள பொதுமக்கள் பகண்டை கூட்டு சாலை வந்து செல்ல போதுமான பேருந்துகள் இயக்க வேண்டும். பாலம் இல்லாததால் பகண்டை கூட்டு சாலை செல்ல அரை நாளுக்கு மேல் ஆகிறது. அதனால் நேரமும், கூடுதல் பணவிரயம் செலவாகிறது. ஆகவே காங்கியனூர்-சுத்தமலை இடையே பாலம் அமைத்து தர வேண்டும். என்றார்.

Tags : Tenpenna River ,Kangianur - Suttamalai , Kangyanur-Suddhamalai, Tenpennai river bridge, demand of 7 village panchayats
× RELATED திருவெண்ணெய்நல்லூர் அருகே கோடை காலத்திலும் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்