தேவதானப்பட்டி பேரூராட்சியில் ‘உர உற்பத்தி ஜோரு’; குப்பைக்கழிவு டூ இயற்கை, மண்புழு உரம்: விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் பாராட்டு குவியுது

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தால் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் இயற்கை உரம் விற்பனை செய்கின்றனர். தேனி மாவட்டத்தில் 30 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால், விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது. விவசாய உற்பத்தியில் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மக்கள்தொகை வளர்ச்சிக்கேற்ப உற்பத்தியை உயர்த்தவும் தேவையான, கொள்கைகளும், நோக்கங்களும் அரசால் வகுக்கப்படுகின்றன.

திமுக அரசு தற்போது விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை அறிவித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தேவதானப்பட்டி பேரூராட்சியில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைக்கழிவுகள் உரமாக மாற்றப்பட்டு விவசாய நிலங்களுக்கு செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேவதானப்பட்டி பேரூராட்சியில் அட்டணம்பட்டி, புல்லக்காபட்டி, மஞ்சளாறுஅணைகிராமம், காமக்காபட்டி உள்ளிட்ட பகுதிகளில் 18 வார்டுகள் உள்ளன. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரித்து வாங்கி வருகின்றனர். பேரூராட்சி வளாகத்தில் உள்ள உரம் தயாரிப்பு கொட்டகையில் கொட்டப்படுகிறது.

பின்னர் காய்கறி கழிவுகள், வீட்டுக்கழிவுகள் பிரித்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இது தவிர மண் புழு உரம் தயார் செய்து இந்த பகுதி விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தேவதானப்பட்டி பேரூராட்சியில் தயாரிக்கப்படும் இயற்கை உரத்தை வாங்கிட விவசாயிகள் போட்டி போடுகின்றனர். குறிப்பாக மண்புழு உரம், இயற்கை உரம் போன்றவைகள் வாங்குவதற்கு முன்கூட்டியே அதிகாரிகளிடம் புக்கிங் செய்து இதனை டன் கணக்கில் வாங்கிட விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனை தோட்டங்களிலோ, வயல்களிலோ இடும்போது மண்ணின் தரம் மேம்பாடு அடைவதுடன், அதிக உற்பத்திக்கும் வழிவகை செய்வதால் விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதே போல் மாட்டுச்சானம் மூலம் மண் புழு உரம் தயார்செய்கிறோம். தேவையான அளவில் மாட்டுச்சானம் வாங்கி, மாட்டுச்சானம் மற்றும் மக்கிய குப்பைகள் ஆகியவற்றால் மண் புழு உரம் தயாரிக்க தயார் செய்யப்படுகிறது. இதே போல் ஜீவாமிர்தம் தயார் செய்யப்படுகிறது. சுற்றுவட்டார பகுதிகளான அட்டணம்பட்டி, புல்லக்காபட்டி, காமக்காபட்டி, மஞ்சளாறுஅணை கிராமம், உள்ளிட்ட இடங்களில் நடப்பாண்டில் பருவமழை பெய்து நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்துள்ளது. ஆகையால் அதிகளவில் விவசாய பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் விவசாய பணிகளுக்கு விவசாயிகள் இயற்கை உரத்தை அதிகம் விரும்புகின்றனர். விவசாயிகள் நாற்றங்கால் அமைக்கும் பணிக்கு அதிகளவில் இயற்கை உரத்தை வாங்கி செல்கின்றனர்.

பின்னர் விவசாய சாகுபடி பயிர்களுக்கு இயற்கை உரம், மண் புழு உரம், ஜீவாமிர்தம், பஞ்சகாவ்யம் போன்றவற்றை தற்போது விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் பேரூராட்சியில் தயார் செய்யப்படும் இயற்கை உரத்திற்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதிக ஆட்களை பணியில் ஈடுபடுத்தி வீடுகளில் உள்ள குப்பைகள் முற்றிலும் வாங்கப்பட்டுவருகிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய் தொற்று குறைய வாய்ப்புள்ளது. அனைத்து வீடுகளில் இருந்தும் கட்டாயமாக குப்பைகள் சேகரிக்கப்பட்டு பேரூராட்சி வளாகத்திற்கு கொண்டுவரப்படுகிறது. இப்படி வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை இயற்கை உரங்களாக மாற்றப்படுகிறது.

சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் ஆர்வத்துடன் இந்த இயற்கை உரத்தை வாங்க வருகின்றனர். தற்போதைய திமுக ஆட்சி மக்களுக்கான ஆட்சி என்பதால் அரசு திட்டங்களை பயனாளிகளுக்கு கொண்டு சேர்ப்பதில் பேரூராட்சி நிர்வாகம் அதிக கவனம் செலுத்தி வருகின்றது. போதிய அளவில் வீடுகள், தெருக்களில் குப்பைகள் சுத்தம் செய்யப்படுவதால் சுகாதாரம் மேம்பட்டு காணப்படுகிறது. முத்தான திடக்கழிவு மேலாண்மை திட்டத்தால் சுகாதாரம் பாதுகாக்கப்பட்டு பொதுமக்களுக்கும் பயனளிக்கிறது.

அதன் இயற்கை உரம் தயாரிப்பால் குறைந்த விலையில் விவசாயிகளுக்கு இயற்கை உரம் விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த விலையில் இயற்கை உரம் வாங்கும் விவசாயிகளுக்கு குறைந்த செலவால் அதிக லாபம் ஈட்டப்படுகிறது. அரசு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் என அனைத்து தரப்பினரையும் வாழ்வில் உயர்த்தும் முயற்சியில் செயல்பட்டு வருகிறது.

அதிமுக ஆட்சியில் முடங்கியது

இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில்:

நகர்ப்புறங்களில் குப்பைகளே இருக்ககூடாது என்ற நோக்கத்துடன், அமெரிக்கா, ஜெர்மன் உள்ளிட்ட வளர்ந்த வல்லரசு நாடுகளில்தான் குப்பைகளில் இருந்தும் உரம் தயாரிக்கும் திட்டம் உள்ளது. இதனை தமிழகத்திற்கு கொண்டு வந்தவர் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநதி. கலைஞர் முதல்வராக இருந்த 2006-2011ம் ஆண்டு குப்பைகளில் உரம் தயாரிக்கும் திட்டத்திற்கு பெரும் முக்கியத்துவம் தந்தார். அனைத்து பேரூராட்சிகளிலும் வளர் மீட்பு பூங்கா என்ற பெயரில் குப்பைகளை உரங்களாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன்பின்பு தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இத்திட்டம் முடக்கப்பட்டது. இப்போது மு.க.ஸ்டாலின் முதல்வரான பின்பு அன்றாடம் சேரும் குப்பைகளில் இருந்து விவசாயத்திற்கு பயன்சேர்க்கும் வகையில் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.’’ என்றனர்.

திமுக ஆட்சியில் துரிதமான பணிகள்

இதுகுறித்து தேவதானப்பட்டி பேரூராட்சி சேர்மன் முருகேஸ்வரி கூறுகையில்:

தற்போது திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய சுகாதார பணிகள், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பருவமழை தொடங்கியுள்ளதால் தெருக்களில் சாக்கடை தேங்காமல் சுத்தம் செய்து கொசு மருந்து தெளித்து பேரூராட்சியை சுகாதாரமான பேரூராட்சியாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. தினந்தோறும் காலையில் அனைத்து வீடுகளுக்கும் தூய்மை பணியாளர்கள் சென்று வீடுகளில் உள்ள குப்பைகளை பிரித்து வாங்குகின்றனர்.

பின்னர் அவற்றை பேரூராட்சி வளாகத்திற்கு கொண்டு வந்து தரம்பிரிக்கின்றனர். தரம்பிரிக்கப்பட்ட குப்பைகள் இயற்கை உரம் தயாரிப்பிற்கு தயார் ஆகிறது. பணியாளர்கள் மூலம் குப்பைகள் அரைக்கப்படுகிறது. இதில் மூன்று பங்கு அரைத்த குப்பைகள், ஒரு பங்கு பழைய மக்கிய உரம், ஒரு பங்கு மாட்டுச்சானம் கலந்து இயற்கை உரத்திற்கு தயார்படுத்துகின்றனர். பின்னர் 10 நாட்கள் கழித்து இயற்கை உரம் தயார் நிலைக்கு வந்து விடுகிறது.’’ என்றார்.

Related Stories: