அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

உடுமலை: உடுமலையை அடுத்த அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலியாக கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து, நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 87 அடியை தொட்டுள்ளது. இதையடுத்து அணை விரைவில் நிரம்பும் சூழலில் உள்ளதால், அமராவதி ஆற்றின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதி அணை மூலம் திருப்பூர்,கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 54 ஆயிரம் ஏக்கர் விலை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு மூலம் பிரதான கால்வாய் வழியாக ஆண்டுதோறும் விளை நிலங்களுக்கு பாசனநீர் திறந்து விடப்படுகிறது. இதுதவிர, அமராவதி அணையில் இருந்து நேரடி பாசனமாக கல்லாபுரம், ராமகுளம் வாய்க்கால் வழியாகவும்  விளைநிலங்களுக்கு பாசனநீர் திறந்து விடப்படுகிறது.

மேலும், அணை நிரம்பும் போதெல்லாம் பாதுகாப்பு கருதி நீர்மட்டம் 89 அடியை தொட்டவுடன் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவது வழக்கம். நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு 1134 கன அடி நீர்வரத்து இருந்தது. இதனால், அணையின் நீர்மட்டம் 87.34 அடியாக உயர்ந்தது. நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதையடுத்து அணையின் மதகுகளில் இருந்து நீர்க்கசிவு பால் போல வழிந்து வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பருவமழை தீவிரமடைந்து வருவதால், அணைக்கு நீர்வரத்தும் தொடர்ந்து அதிகரிக்க கூடும். இதனால், எந்த நேரத்திலும் அணையில் இருந்து உபரி நீர் ஆற்றின் வழியாக திறந்து விடப்படலாம் என பொதுப்பணித்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், அமராவதி வடிநீர் உட்கோட்டம் உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் விடுத்துள்ள சுற்றறிக்கையில்:

அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் அணைக்கு நேற்று இரவு 7 மணி நிலவரப்படி 1,134 கனஅடி நீர்வரத்து உள்ளது. அணை நீர்மட்டம் 87.34 அடியாக உயர்ந்துள்ளது. அணை விரைவில் நிரம்பும் தருவாயில் இருப்பதால் எந்நேரமும் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும். எனவே கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’’ என அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, அமராவதி நகர், குமரலிங்கம், மடத்துக்குளம் காவல் நிலையத்துக்கும், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணாபுரம், காங்கேயம் ஆகிய தாசில்தார்களுக்கும், உடுமலை, தாராபுரம், கரூர் கோட்டாட்சியர்களுக்கும், திருப்பூர் கரூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து தகவல் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அமராவதி ஆற்றின் கரையோரம் வசிக்கின்ற மக்களுக்கு தண்டோரா போட்டு வெள்ள அபாயம் குறித்து எச்சரித்து கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: